
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெற்றதை இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆதரித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.
அண்மைக் காலத்தில் ஃபார்மில் இல்லாத ஹார்திக் பாண்டியா உலகக் கோப்பைக்கான அணியில் தேர்வானது பல விமர்சனங்களை எழச் செய்தது. ஆனால், அவரது கடந்த கால ஆட்டங்களை கருத்தில் கொண்டு பாண்டியாவை அணியில் தேர்ந்தெடுத்ததாக தேர்வுக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், விராட் கோலியுடன் ஹார்திக் பாண்டியாவும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டிருப்பது சேஸிங்கின்போது மிகுந்த உதவியாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஹார்திக் பாண்டியாவால் போட்டியின்போது என்ன செய்ய முடியும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். நடப்பு ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை. ஆனால், இந்திய அணிக்காக அவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அவர் அணிக்காக ஒருமுறை தொடர் ஒன்றையும் வென்று கொடுத்துள்ளார். சேஸிங்கின்போது விராட் கோலியுடன் இணைந்து அவர் பேட் செய்யும் காம்பினேஷன் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையும் என்றார்.
இந்திய அணிக்காக ஹார்திக் பாண்டியா கடைசியாக கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.