மும்பை இந்தியன்ஸ் அணியினர் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்பதை மூத்த வீரர்கள் உறுதி செய்திருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். அவர் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மும்பை ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இதற்கிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முறை மோசமாக விளையாடி 14 போட்டிகளில் 4 வெற்றியை மட்டுமே பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து, லீக் சுற்றிலிருந்து முதல் அணியாக வெளியேறியது.
இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமனம் செய்தது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:
“நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் விளையாடியுள்ளேன். அணி நிர்வாகம் சிறப்பானதுதான், ஆனால் அவர்களின் முடிவு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தை யோசித்து ஹர்திக் பாண்டியாவை அணி நிர்வாகம் தேர்வு செய்தது.
கேப்டன் விளையாடுவதும், அணியின் மற்ற வீரர்கள் விளையாடுவதிலும் வேறுபாடு தெரிந்தது. ஹர்திக் பாண்டியாவை இந்த நேரத்தில் கேப்டனாக நியமித்தது சரியில்லை என நினைக்கிறேன். ஓராண்டுக்கு பிறகு நியமித்திருக்கலாம்.
இது ஹர்திக் பாண்டியாவின் தவறில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சிறப்பாகதான் செயல்பட்டார். மும்பை அணி ஒற்றுமையுடன் விளையாடவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருக்கிறார்களா என்பதை மூத்த வீரர்கள் உறுதி செய்திருக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.