
ஐபிஎல் தொடரைப் போல் அல்லாமல் டி20 உலகக் கோப்பையில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த காத்திருக்கிறார்கள்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் டி20 போட்டிகளில் பல விஷயங்களை மாற்றியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் மிகச் சாதரணமாக 250 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை குவித்தனர். நடப்பு ஐபிஎல் தொடருக்கு முன்பாக, ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை மட்டுமே 250 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் இதுவரை 8 முறை 250 ரன்ககளுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளன.
நடப்பு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் பலரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட், மேற்கிந்தியத் தீவுகளின் ஆண்ட்ரே ரஸல் போன்ற வீரர்கள் அதிரடியாக விளையாடினர். உலகக் கோப்பைத் தொடரிலும் அவர்களது அதிரடி தொடருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், ஐபிஎல் தொடரைப் போன்று பேட்ஸ்மேன்களால், உலகக் கோப்பைத் தொடரில் விளையாட முடியாது. அதிரடியாக விளையாடுவதையும் கடந்து, ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கேற்ப விளையாட வேண்டியிருக்கும்.
உலகக் கோப்பைத் தொடரில் ஐபிஎல் தொடரைப் போன்று இம்பாக்ட் பிளேயர் விதி கிடையாது. அதனால் அவர்களால் அதிரடியாக மட்டுமே விளையாட முடியாது. ஆட்டத்தின் தேவையை உணர்ந்து விளையாட வேண்டியிருக்கும்.
அண்மையில் மூன்றாவது முறையாக ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் இது தொடர்பாக பேசியுள்ளார்.
அவர், “ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி இருக்கிறது. ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கிடையாது. அணிகள் அதிகம் அவர்களது ஆல்ரவுண்டர்களைச் சார்ந்தே இருக்கப் போகின்றன. ஐபிஎல் தொடரில் பேட்டிங் ஆல்ரவுண்டரை 8-வது இடத்தில் களமிறக்குவது போல, உலகக் கோப்பையில் களமிறக்க முடியாது. ஐபிஎல் தொடரில் குவிக்கப்படும் இமாலய இலக்குகளை உலகக் கோப்பைத் தொடரில் குவிப்பதற்கு வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஏனென்றால், உலகக் கோப்பையில் இம்பாக்ட் பிளேயர் விதி இல்லாததால் ஒரு கூடுதல் பேட்ஸ்மேன் தெரிவு என்பது கிடையாது,” என்றார்.
பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபேவை சென்னை சூப்பர் கிங்ஸ் பிரத்யேகமாக இம்பாக்ட் பிளேயராக களமிறக்கியது. வழக்கமாக அவர் 4-வது அல்லது 5-வது வீரராக கமிறங்குவார். ஆனால், இம்பாக்ட் பிளேயர் விதியால் அவர் பேட்ஸ்மேனாக மட்டும் அணி நிர்வாகம் விருப்பப்படும் இடங்களில் களமிறக்கப்பட்டார். அவர் அதிரடியாக விளையாடி சில போட்டிகளின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். ஆனால், உலகக் கோப்பைத் தொடரில் துபே அவரது பந்துவீச்சு திறமையையும் வெளிக்காட்ட வேண்டியிருக்கும். ஏனென்றால், அணியில் ஹார்திக் பாண்டியா இருக்கிறார். அவரையே அணி முதல் தெரிவாகப் பார்க்கும்.
இது தொடர்பாக ரோஹித் சர்மா, “ உலகக் கோப்பைத் தொடரில் ஷிவம் துபே சில ஓவர்களை வீச வேண்டும் என எதிர்பார்ப்பேன். ஹார்திக் பாண்டியாவிடமிருந்தும் அதனையே எதிர்பார்ப்பேன். ஆல்ரவுண்டர்கள் கண்டிப்பாக அவர்களது பங்களிப்பை எல்லாத் துறைகளிலும் கொடுக்க வேண்டும்.
ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் எதிர்கொண்ட ஆடுகளங்களைப் போன்று, உலகக் கோப்பைத் தொடரின் போட்டிகள் நடைபெறும் ஆடுகளங்கள் இருக்காது. ஆடுகளங்களுக்கு ஏற்ப பேட்ஸ்மேன்கள் விளையாட வேண்டியிருக்கும்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் 80’கள் மற்றும் 90’களில் இருந்ததைப் போன்று தற்போது இல்லை எனவும், அவை தற்போது மெதுவான ஆடுகளங்களாக மாறிவிட்டதாகவும் ஆடுகளத்தை சீரமைப்பதில் அனுபவம் பெற்றவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும், “உலகக் கோப்பைத் தொடர் தொடங்கி இரண்டாவது வாரத்திலிருந்து பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். குறிப்பாக, சுழற்பந்துவீச்சாளர்கள் மிகுந்த ஆதிக்கம் செலுத்துவார்கள். உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் 4 சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளத்தை கருத்தில் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கலாம். அதனால், ஐபிஎல் தொடரைப் போன்று 250-க்கும் அதிகமான ரன்களை இங்கு குவிக்க முடியாது” என்றனர்.
மேற்கிந்தியத் தீவுகளில் அதிகம் விளையாடிய அனுபவம் கொண்டவர் டேவிட் வார்னர். அவர் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் தொடர்பாக வார்னர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகளின் ஆடுகளங்கள் வறண்டு காணப்படும். அதனால், பந்து கடினமாக மாறும். பந்துவீச்சில் அதிக ஸ்பின் இருக்கும். ஐபிஎல் தொடரைப் போன்று எளிதில் பந்துகளை எதிர்கொள்ள முடியாது. நான் இங்கு கரீபியன் பிரிமீயர் லீக் போட்டிகளில் அதிகம் விளையாடியுள்ளேன். ஆடுகளங்கள் மிகவும் மெதுவானதாக இருக்கும் என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் சராசரி ரன் ரேட் 9.56 ஆக உள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச சராசரி ஆகும். அணியின் சராசரி ஸ்கோரும் 180 ஆக உள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 230 ஆக உள்ளது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்களில் குவிக்கப்பட்ட ஸ்கோர்களின் தரவுகள் முற்றிலும் வேறுபட்டவை.
மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள ஆடுகளங்களில் குவிக்கப்பட்ட சராசரி ஸ்கோர்கள்
ஆண்டிகுவா - 123 ரன்கள்
பார்படாஸ் - 138 ரன்கள்
கயனா - 124 ரன்கள்
டிரினிடாட் - 115 ரன்கள்
செயிண்ட் வின்செண்ட் - 118 ரன்கள்
க்ராஸ் ஐலெட் - 139 ரன்கள்
தரவுகளின் அடிப்படையில், ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தியது போல டி20 உலகக் கோப்பைத் தொடரில் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.