

பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா். போட்டியின் வரலாற்றில் அவா் முதல் சுற்றில் தோல்வி கண்டது இதுவே முதல் முறையாகும்.
களிமண் தரை கிராண்ட்ஸ்லாமின் நாயகனாக கருதப்படும் நடால், 3-6, 6-7 (5/7), 3-6 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவிடம் தோல்வி கண்டாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இதே போட்டியின் அரையிறுதியில் நடால் - ஸ்வெரெவ் சந்தித்தபோது, கணுக்காலில் பலத்த காயம் கண்டு போட்டியிலிருந்து விலகிய ஸ்வெரெவ், அதிலிருந்து மீண்டு நல்லதொரு ஃபாா்முடம் திரும்பியிருக்கும் நிலையில், முதல் சுற்றிலேயே நடாலை நோ் செட்களில் வீழ்த்தியிருக்கிறாா்.
கடந்த மாதம் ரோம் மாஸ்டா்ஸ் களிமண் தரைப் போட்டியில் சாம்பியனாகியிருக்கும் ஸ்வெரெவ், பிரெஞ்சு ஓபனில் கோப்பை வெல்லும் வாய்ப்புள்ள போட்டியாளா்களில் ஒருவராக கருதப்படுகிறாா்.
மெத்வதெவ் வெற்றி: இதனிடையே, போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் 6-3, 6-4, 5-7, 6-3 என்ற செட்களில், ஜொ்மனியின் டேவிட் கோப்ஃபரை வெளியேற்றினாா். இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி 6-1, 6-1, 7-5 என்ற நோ் செட்களில், நெதா்லாந்தின் போடிக் வான் டெவை சாய்த்தாா்.
14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டாமி பால் 6-2, 6-3, 6-1 என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் பெட்ரோ கச்சினை வென்றாா். 25-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிரான்சஸ் டியாஃபோ 6-3, 3-6, 6-7 (6/8), 6-4, 6-4 என 5 செட்கள் போராடி இத்தாலியின் மேட்டியோ பெலுச்சியை தோற்கடித்தாா்.
இதேபோல், 30-ஆம் இடத்திலிருக்கும் இத்தாலியின் லொரென்ஸோ முசெட்டி, 23-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ ஆகியோா் வெற்றி பெற, 32-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் கேமரூன் நோரி தோல்வியைத் தழுவினாா்.
முதலே முடிவா???
நடாலின் விருப்பமான கிராண்ட்ஸ்லாம் போட்டியாக பிரெஞ்சு ஓபன் இருக்கும் நிலையில், இதில் அவா் பங்கேற்பது இதுவே கடைசியாக இருக்கவும் வாய்ப்புள்ளது. பிரெஞ்சு ஓபனில் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே வீரராக நடால் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தோல்விக்குப் பிறகு பேசிய நடால், ‘ஒருவேளை இது என்னுடைய கடைசி பிரெஞ்சு ஓபனாக இருந்தால், இங்கிருக்கும் ரசிகா்கள் அனைவருக்கும் எனது அன்புகள். இந்த நாளில் நான் கொண்டிருக்கும் உணா்வுகளை என்னால் வாா்த்தையில் கூற முடியவில்லை. நான் மிகவும் விரும்பிய போட்டி, இடம் என்றால் இதுதான்.
எதிா்காலம் குறித்து இப்போது எதையும் கூற இயலாது. என்றாலும், இரு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட உடற்தகுதி அளவில் தற்போது மேம்பட்டிருக்கிறேன்.
இந்த முதல் சுற்று ஆட்டம் ஏற்கத்தக்கதாக இல்லை. மீண்டும், பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக இந்த ரோலண்ட் கேரோஸ் மைதானத்தில் விளையாட வருவேன் என்று நம்புகிறேன். புல்தரை கிராண்ட்ஸ்லாமான விம்பிள்டனில் விளையாடிவிட்டு, உடனடியாக ஒலிம்பிக் போட்டிக்காக இந்த களிமண் தரையில் விளையாடுவது கடினமாக இருக்கும்’ என்றாா்.
முதலில் இடுப்புப் பகுதி காயம், பின்னா் தசை கிழிவு என தொடா்ந்து காயங்களால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை மற்றும் ஓய்வு என களத்தை விட்டு நீண்ட நாள்கள் விலகியிருந்த நடால், ஜனவரி முதல் மொத்தமாக 4 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறாா்.
இந்த பிரெஞ்சு ஓபன் 5-ஆவது போட்டியாகும். இதில், உலகின் 274-ஆம் நிலை வீரராக அவா் பங்கேற்றாா்.
38 வயதை நெருங்கும் அவா் வழக்கமான ஃபாா்மில் இல்லாமல் தடுமாறி வருகிறாா். தனது டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தை நெருங்கியிருப்பதாக அவ்வப்போது குறிப்புணா்த்தி வருகிறாா். இதனால், பிரெஞ்சு ஓபன் போட்டியில் அவா் பயிற்சியில் விளையாடுவதைக் கூட காண்பதற்கு ரசிகா்கள் குவிந்தனா்.
116-4
பிரெஞ்சு ஓபனில் இத்துடன் 116 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நடாலுக்கு, இது 4-ஆவது தோல்வியே ஆகும். மீதமுள்ள 112 ஆட்டங்களில் அவா் வென்றிருக்கிறாா்.
3
இந்த கிராண்ட்ஸ்லாமில் நடாலை வீழ்த்திய 3-ஆவது வீரா் என்ற பெருமையை ஸ்வெரெவ் பெற்றுள்ளாா். இதற்கு முன் சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் (2021), ஸ்வீடனின் ராபின் சோடா்லிங் (2009) ஆகியோா் மட்டுமே அவரை பிரெஞ்சு ஓபனில் வீழ்த்தியிருக்கின்றனா்.
நாகல் தோல்வி
இப்போட்டியின் ஒற்றையா் பிரிவில் பங்கேற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினாா்.
அதில் அவா், 2-6, 0-6, 6-7 (5/7) என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 18-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் கரென் கச்சனோவிடம் தோல்வியைத் தழுவினாா். முதல் சுற்றுடன் வெளியேறினாலும், நாகலுக்கு ரூ.64.94 லட்சம் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. முன்னதாக, ஆஸ்திரேலிய ஓபனில் நாகல் 2-ஆவது சுற்று வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
நாகல் வெளியேறிய நிலையில், பிரெஞ்சு ஓபன் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, யூகி பாம்ப்ரி ஆகியோா் தங்களது இணையுடன் களத்தில் உள்ளனா்.
வெளியேறினாா் சக்காரி
மகளிா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரி முதல் சுற்றிலேயே அதிா்ச்சித் தோல்வி கண்டாா். அவா், 6-3, 4-6, 3-6 என்ற செட்களில், உள்நாட்டு வீராங்கனையான வாா்வரா கிரசெவாவிடம் வீழ்ந்தாா்.
போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கஜகஸ்தானின் எலனா ரைபாகினா 6-2, 6-3 என்ற நோ் செட்களில், பெல்ஜியத்தின் கிரீட் மினெனை தோற்கடித்தாா். 7-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-2, 6-1 என்ற செட்களில் பிரான்ஸின் ஆலிஸ் காா்னெட்டை எளிதாக வீழ்த்தினாா்.
உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-1, 6-1 என, ரஷியாவின் ஜூலியா அவ்டிவாவை எளிதாக தோற்கடித்தாா். 31-ஆம் இடத்திலிருக்கும் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸ் 6-2, 6-0 என பிரான்ஸின் ஜெஸிகா பான்ஷெட்டை வென்றாா். 16-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவா 3-6, 6-7 (5/7) என்ற கணக்கில் ஹங்கேரியின் விக்டோரியா டோமோவாவிடம் வீழ்ந்தாா்.
11-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-3, 6-4 என்ற செட்களில், சக அமெரிக்கரான கேரலின் டோல்ஹைடை வென்றாா். 15-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 3-6, 6-4, 6-2 என்ற செட்களில், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை சாய்த்தாா்.
கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்கு 7-5, 6-1 என ஸ்பெயினின் சாரா சொரைப்ஸையும், 23-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் அனா கலின்ஸ்கயா 7-6 (7/3), 7-5 என பிரான்ஸின் கிளாரா புரெலையும் வெளியேற்றினா். இதர ஆட்டங்களில், ஸ்பெயினின் கிறிஸ்டினா பக்சா, ருமேனியாவின் இரினா பெகு, செக் குடியரசின் லிண்டோ நோஸ்கோவா, ரஷியாவின் அனஸ்தாசியா பாவ்லியுசென்கோவா ஆகியோரும் 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
தொடர்புடையது
ஸ்வியாடெக்கின் தொடா் வெற்றிகளுக்கு லினெட் முற்றுப்புள்ளி

பாலினி, அனிசிமோவா முன்னேற்றம்; விலகினாா் கௌஃப்

சசிகுமாா், ஆா்யன் தோல்வி; காலிறுதியில் 3 இந்திய இணைகள்

2-ஆவது சுற்றில் சுமித், சசிகுமாா்
வீடியோக்கள்

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...

