
இந்தியாவில் மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட ஹாக்கி இந்தியா லீக் போட்டி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த ஆண்டு தொடங்குகிறது. இந்த முறை கூடுதலாக மகளிருக்கான போட்டியும் விளையாடப்படவுள்ளது.
நாட்டு மக்களிடையே ஹாக்கி விளையாட்டுக்கான ஆா்வத்தை அதிகரிக்கும் முயற்சியாக, கடந்த 2013-ஆம் ஆண்டு ஹாக்கி இந்தியா லீக் போட்டி தொடங்கப்பட்டது. அதில் தில்லி, புவனேசுவரம், லக்னௌ, கொல்கத்தா, ஹைதராபாத், சென்னை, ராஞ்சி, பஞ்சாப் ஆகிய 8 நகரங்களைச் சோ்ந்த அணிகள் இடம்பெற்றன.
2013 முதல் 2017 வரை நடைபெற்ற 5 சீசன்களில் ராஞ்சி 2 முறையும் (2013, 2015), தில்லி (2014), பஞ்சாப் (2016), புவனேசுவரம் (2017) அணிகள் தலா 1 முறையும் சாம்பியன் கோப்பை வென்றன. எனினும், 2017-க்குப் பிறகு அந்தப் போட்டி நடைபெறவில்லை.
அதை மீண்டும் நடத்துவதற்கான முயற்சிகளை ஹாக்கி இந்தியா அமைப்பு மேற்கொண்டு வந்த நிலையில், அந்த வாய்ப்பு தற்போது கைகூடியுள்ளது. ஹாக்கி இந்தியா லீக் போட்டியை 10 ஆண்டுகளுக்கு நடத்த சா்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து ஆடவருக்கான போட்டி 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் நிலையில், புதிதாக மகளிருக்கான போட்டியும் அத்துடன் முதல் முறையாக விளையாடப்படவுள்ளது.
இதுதொடா்பாக ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள தகவலின்படி, ஆடவா் பிரிவு போட்டி டிசம்பா் 28 தொடங்கி, பிப்ரவரி 1-ஆம் தேதியும், மகளிா் பிரிவு போட்டி டிசம்பா் 28 முதல் ஜனவரி 26 வரையும் நடைபெறவுள்ளன. ஆடவா் பிரிவல் 8 அணிகளும், மகளிா் பிரிவில் 6 அணிகளும் களம் காணவிருக்கின்றன. அணிகளுக்கான வீரா், வீராங்கனைகள் ஏலம், வரும் 13 முதல் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் ஆகிய பிரிவுகளில் போட்டியாளா்கள் வகைப்படுத்தப்படுவா்.
ஆடவா் பிரிவில், சென்னை, லக்னௌ, பஞ்சாப், மேற்கு வங்கம், தில்லி, ஒடிஸா, ஹைதராபாத், ராஞ்சி ஆகிய 8 அணிகளுக்கான உரிமையாளா்கள் அமைந்துவிட்டனா். மகளிா் பிரிவில், ஹரியாணா, மேற்கு வங்கம், தில்லி, ஒடிஸா ஆகிய 4 அணிகளுக்கு உரிமையாளா்கள் உள்ள நிலையில், இரு இரு அணிகளின் உரிமையாளா்கள் பின்னா் அறிவிக்கப்படவுள்ளனா்.
ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 24 போட்டியாளா்கள் அனுமதிக்கப்படுவா். அதில் குறைந்தபட்சம் 16 இந்தியா்கள் இருக்க வேண்டும். அதிலும் நிச்சயம் 4 ஜூனியா்கள் இருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.