
பாரீஸ் ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃபின் சாதனை அல்ஜீரிய பெண்களிடையே மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பலரையும் குத்துச்சண்டையில் ஆர்வம் கொள்ள செய்துள்ளது.
இமென் கெலிஃப் - தங்கப் பதக்கம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமென் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். பாலின அடையாளம் தொடர்பான சர்ச்சைகளுக்கு நடுவே இமென் கெலிஃப் தங்கப்பதக்கம் வென்றதற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அல்ஜீரியாவில் கொண்டாட்டம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இமென் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றதையடுத்து, வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா கொண்டாட்டத்தில் திளைத்தது. அல்ஜீரியாவில் உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் எனப் பலரும் இமென் கெலிஃபின் இந்த வெற்றியைக் கொண்டாடினர். பெண்கள் பலரும் குத்துச்சண்டையில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். அவர்கள் இமென் கெலிஃபை தங்களது முன்மாதிரி (ரோல்மாடல்) எனவும் தெரிவிக்கின்றனர்.
அல்ஜீரியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை விளம்பர பதாகைகள், குத்துச்சண்டை பயிற்சி மையங்கள் உள்பட பல்வேறு இடங்களில் இமென் கெலிஃபின் பேனர்களை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பாலின அடையாள சர்ச்சைகளுக்கு நடுவே தங்கப்பதக்கம் வென்று சாதித்த இமென் கெலிஃப் அல்ஜீரியாவின் ஹீரோவாக மாறினார்.
இமென் கெலிஃப் எனது ரோல் மாடல்
சௌகர் அமினா என்ற மருத்துவ மாணவி இமென் கெலிஃபை தனது முன்மாதிரி (ரோல்மாடல்) என தெரிவித்துள்ளார். சௌகர் அமினா ஓராண்டாக குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
குத்துச்சண்டை பயிற்சி குறித்து பேசிய அமினா, குத்துச்சண்டை பயிற்சியை தொடங்கியதிலிருந்து எனது ஆளுமைத் திறனில் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்கிறேன். நான் முன்பைவிட தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உணர்கிறேன். அதிக அளவிலான மன அழுத்தங்கள் எதுவும் இல்லை. என்னை தற்காத்துக்கொள்ள கற்றுக்கொண்டேன் என்றார்.
விமர்சனங்களுக்கு நடுவே கிடைத்த வரவேற்பு
அல்ஜீரியாவில் உள்ள சில குழுக்கள் இமென் கெலிஃப் தவறான உதாரணத்தை பெண்களுக்கு ஏற்படுத்துவதாக அவர் மீது விமர்சனங்களை முன்வைத்தன. ஹிஜாப் அணிவதற்கு பதிலாக அவர் குத்துச்சண்டை உடையை அணிந்து பெண்களுக்கு தவறான முன்னுதாரணமாக திகழ்கிறார் எனவும் கூறினர்.
இருப்பினும், இமென் கெலிஃபுக்கான ஆதரவு குறையவில்லை. இமென் கெலிஃப் பங்குபெற்ற குத்துச்சண்டை போட்டிகள் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டன. அல்ஜீரியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் பெரிய திரைகளில் ஒளிபரப்பப்பட்ட இமென் கெலிஃப் பங்குபெறும் போட்டிகளை பலரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமினா அப்பாஸி என்ற பெண் கூறுகையில், இமென் கெலிஃப் எந்த மாதியான விமர்சனங்களையும் எதிர்கொண்டு சாதிக்கக் கூடியவர். பழமைவாதத்தை கடைபிடிக்கும் குடும்பங்களில் உள்ள பெண்களும் குத்துச்சண்டையில் ஈடுபடுவதற்கு இமென் கெலிஃப் வழிவகுத்துள்ளார் என்றார்.
இமென் கெலிஃபுடன் துணைநின்ற அல்ஜீரியா
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க், ஜே.கே.ரௌலிங் போன்ற பலரும் இமென் கெலிஃப் ஒரு திருநங்கை எனக் கூறிவந்த நிலையில், அல்ஜீரியாவும் அல்ஜீரிய மக்களும் அவருக்கு உறுதுணையாக நின்று ஆதரவளித்தனர்.
குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் பலரும் இமென் கெலிஃபுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தன்னம்பிக்கை மற்றும் விடா முடாயற்சியுடன் செயல்பட்ட இமென் கெலிஃப் தடைகளை தகர்த்து தங்கப்பதக்கம் வென்றதாக அவருக்கு புகழாரம் சூட்டினர்.
குத்துச்சண்டை பயிற்சியாளர் ஒருவர் கூறுகையில், மத்திய அல்ஜீரியாவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இமென் கெலிஃப், இன்று உலகம் முழுவதும் அனைவராலும் பாரட்டப்படும் அளவுக்கு வளர்ந்துள்ளார். குத்துச்சண்டையை தங்களது கனவாக நினைத்து பயிற்சி பெற்றுவரும் அல்ஜீரிய பெண்கள் பலருக்கும் அவர் உத்வேகம் அளிக்கிறார் என்றார்.
இனிவரும் காலங்களில் அல்ஜீரியாவிலிருந்து பல்வேறு குத்துச்சண்டை வீராங்கனைகளை சர்வதேச அரங்கில் எதிர்பார்க்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.