
ஹைதராபாத் கிரிக்கெட் டெஸ்ட்டில் இந்தியா அணி வெற்றி பெற 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து.
இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் டெஸ்ட் தொடா் நடைபெறும் நிலையில், முதல் ஆட்டம் ஹைதராபாதில் வியாழக்கிழமை தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மட்டுமே நிலைத்து ஆடி 70 ரன்களைச் சோ்த்தாா். இந்திய தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஸ்கோரான 421/7 ரன்களுடன் இந்திய அணித் தரப்பில் ஜடேஜா-அக்ஸா் படேல் சனிக்கிழமை பேட்டிங்கைத் தொடா்ந்தனா்.
ஆனால் ஜடேஜா 1 ரன் மட்டுமே சோ்த்த நிலையில் 2 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 87 ரன்களுக்கு அவுட்டானாா். அக்ஸா் படேல் 44 ரன்களுடன் வெளியேற, பும்ரா டக் அவுட்டானாா். இறுதியில் 121 ஓவா்களில் இந்தியா 436 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பௌலிங்கில் இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 4-79, டாம் ஹாா்ட்லி, ரெஹான் அகமது ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். தொடா்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி தரப்பில் தொடக்க பேட்டா்கள் ஸாக் கிராலி 31, பென் டக்கெட் 47 ரன்களுடன் வெளியேறினா்.
அதையடுத்து களமிறங்கிய ஒல்லே போப் நிலைத்து ஆடி இந்திய பௌலரிகளின் பொறுமையை சோதித்தாா். அவர் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். ஏனைய வீரா்கள் ஜோ ரூட் 2, பென் ஸ்டோக்ஸ் 6, பென் ஃபோக்ஸ் 34, ரன்களுடன் அவுட்டாகி வெளியேறினா். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸை 12-ஆவது முறையாக டெஸ்ட் ஆட்டத்தில் அவுட்டாக்கியுள்ளாா் அஸ்வின். 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 77 ஓவா்களில் 316/6 ரன்கள் குவித்திருந்தது. போப், 208 பந்துகளில் 17 பவுண்டரிகளை விளாசி 148 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
தொடர்ந்து 4ஆம் நாளான இன்று(ஞாயிறு) விளையாடிய இங்கிலாந்து 420 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போப் 196 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 2வது இன்னிங்ஸில் பௌலிங்கில் இந்திய தரப்பில் பும்ரா 4, அஸ்வின் 3, ஜடேஜா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதையடுத்து இந்தியா அணி வெற்றி பெற 231 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.