
அல்-நாஸர் அணி சௌதி சூப்பர் கோப்பை அரையிறுதியில் 2-1 என வென்றது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது கோல் அடிக்க அசிஸ்ட் செய்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.
ஹாங்காங்கில் அமைந்துள்ள ஹாங்காங் ஸ்டேடியம் எனும் திடலில் அல்-இத்திஹாத் அணியும் அல்-நாஸர் அணியும் மோதின.
இந்தப் போட்டியின் 10-ஆவது நிமிஷத்தில் அல்-நாஸர் அணியின் சடியோ மானே கோல் அடித்து அசத்தினார். அதற்கு பதிலடியாக அல்-இத்திஹாத் கிளப் 16-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தது.
1-1 என சமநிலையில் இருக்க, 25-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு கொடுத்து சடியோ மானே வெளியேற்றப்பட்டார். இதனால், அல்-நாஸர் 10 வீரர்களுடன் விளையாடியது.
முதல் பாதியில் இரு அணியும் 1-1 சமநிலையில் இருக்க, இரண்டாம் பாதியில் அல்-நாஸர் அணி ஆதிக்கம் செலுத்தியது.
இந்தப் போட்டியின் 61-ஆவது நிமிஷத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ செய்த அசிஸ்ட்டால் அந்த அணியின் ஜாவோ பெலிக்ஸ் கோல் அடித்தார்.
ரொனால்டோ நினைத்திருந்தால் அதை அவரே கோல் அடித்திருக்கலாம். இருப்பினும் தனது அணி வீரரின் முதல் கோல் அடிக்க அவர் உதவியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
90+5-ஆவது நிமிஷம் வரை போராடியும் அல்-இத்திஹாத் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில், அல்-நாஸர் அணி 2-1 என வெற்றி பெற்றது.
சௌதி சூப்பர் கோப்பை இறுதிப் போட்டியில் அல்-நாஸர் அணியுடன் வரும் சனிகிழமை (ஆக.23) அல்-கத்சியா எஃப்சி அல்லது அல்-அஹ்லி சவுதி அணி மோதவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.