

அடிப்படை ஆதாரமின்றி பகிரப்பட்டு வரும் வதந்திகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்மிருதி மந்தனாவை திருமணம் செய்யவிருந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் தெரிவித்துள்ளார்.
பலாஷ் உடனான திருமணம் கைவிடப்படுவதாக ஸ்மிருதி மந்தனா இன்று அறிக்கை மூலம் தெரிவித்திருந்த நிலையில், பலாஷும் வதந்திகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
காதலர்களான இவர்களின் திருமணம், பெற்றோர் ஒப்புதலுடன் நடைபெறவிருந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதால், திருமணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே மற்றொரு பெண்ணுடன் பலாஷ், தனிப்பட்ட முறையில் அந்தரங்கமாக பேசிய ஸ்கிரீன் ஷாட்டுகள் இணையத்தில் பகிரப்பட்டன. இதனால், இவர்களின் திருமணம் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
தற்போது இந்த விவாதத்திற்கு ஸ்மிருதி மந்தனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனக்கு நடைபெறவிருந்த திருமணம் நின்றுவிட்டதாகவும், இத்துடன் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஸ்மிருதி, தொடர்ந்து இந்திய அணிக்காக கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பலாஷ் முச்சலும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
''எனது காதல் வாழ்க்கையில் இருந்து பின்வாங்கி, தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தவுள்ளேன். அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் இத்தனை எளிதாக எதிர்வினையாற்றுவது மிகுந்த வேதனையாக உள்ளது. இது எனக்கு மிகவும் கடினமான சூழல், ஆனால், நம்பிக்கையுடன் இதிலிருந்து வெளியே வருவேன்.
எந்தவித ஆதாரமுமின்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வைத்து நாம் ஒருவரை மதிப்பிடக் கூடாது என்பதை ஒரு சமூகமாக நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நமது வார்த்தைகள் நினைத்துப்பார்க்க முடியாத வகையில் காயத்தை ஏற்படுத்தும். இது தொடர்பாக அடிப்படை ஆதாரமற்ற, வதந்திகளை பரப்புவோர் மீது எனது குழு கடுமையான சட்ட நவடிக்கை எடுக்கும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | திருமணம் கைவிடப்பட்டது... அறிக்கை வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.