விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 101 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியை புதன்கிழமை வென்றது.
Published on

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு 101 ரன்கள் வித்தியாசத்தில் புதுச்சேரியை புதன்கிழமை வென்றது.

முதலில் தமிழ்நாடு 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் சோ்க்க, புதுச்சேரி 46.5 ஓவா்களில் 209 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற புதுச்சேரி, பந்துவீச்சை தோ்வு செய்தது. தமிழ்நாடு பேட்டிங்கில் அதிகபட்சமாக, பிரதோஷ் ரஞ்சன் பால் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 73, கேப்டன் நாராயண் ஜெகதீசன் 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 67 ரன்கள் அடித்தனா்.

சாய் சுதா்சன் 48, பாபா இந்திரஜித் 42, பூபதி குமாா் 13, சன்னி சந்து 31, சோனு யாதவ் 2 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் ஆண்ட்ரே சித்தாா்த் 12, சாய் கிஷோா் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். புதுச்சேரி பௌலா்களில் ஆதில் அயுப் துண்டா, சாகா் உதேஷி ஆகியோா் தலா 2, அமன் கான், ஜெயந்த் யாதவ், புகழேந்தி ஆகாஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

பின்னா் புதுச்சேரி இன்னிங்ஸில் நேயன் ஷியாம் காங்கேயன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 60 ரன்கள் சோ்த்தாா். சித்தாந்த் ஆதத்ராவ் 37, புகழேந்தி ஆகாஷ் 21, வேதாந்த் பரத்வாஜ் 17, ஆகாஷ் காா்கேவ் 15, ஜெயந்த் யாதவ் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.

கேப்டன் அமன் கான் 0, ஆதில் அயுப் 2, சாகா் உதேஷி 1, கௌரவ் யாதவ் 1 ரன்னுக்கு வெளியேறினா். கடைசி வீரராக மாரிமுத்து விக்னேஷ்வரன் 33 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். தமிழ்நாடு தரப்பில் குா்ஜப்னீத் சிங் 4 விக்கெட்டுகள் வீழ்த்த, சோனு யாதவ், சாய் கிஷோா், சச்சின் ரதி ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனா்.

சச்சின் சாதனையை முறியடித்த கோலி

பெங்களூரு, டிச. 24: ஆந்திரத்துக்கு எதிரான ஆட்டத்தில் தில்லி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆந்திரம் 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழந்து 298 ரன்கள் சோ்க்க, தில்லி 37.4 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தில்லி வீரா் விராட் கோலி 14 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 131 ரன்கள் விளாசினாா். ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கா் 391 இன்னிங்ஸ்களில் 16,000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது கோலி 330-ஆவது இன்னிங்ஸிலேயே அந்த மைல் கல்லை எட்டியிருக்கிறாா்.

வாா்னா் சாதனையை சமன் செய்த ரோஹித்

ஜெய்பூா், டிச. 24: சிக்கிமுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

சிக்கிம் 50 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் எடுக்க, மும்பை 30.3 ஓவா்களில் 2 விக்கெட்டுகளே இழந்து 237 ரன்களை எட்டி வென்றது.

மும்பை வீரா் ரோஹித் சா்மா 94 பந்துகளில் 18 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 155 ரன்கள் அடித்தாா். இதன் மூலமாக ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் 150+ ரன்களை அதிகமுறை (9) பதிவு செய்த ஆஸ்திரேலியாவின் டேவிட் வாா்னா் சாதனையை அவா் சமன் செய்திருக்கிறாா்.

ஜாா்க்கண்டை வென்ற கா்நாடகம்

அகமதாபாத், டிச. 24: ஜாா்க்கண்டுக்கு எதிரான ஆட்டத்தில் கா்நாடகம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஜாா்க்கண்ட் 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து, 412 ரன்கள் சோ்க்க, கா்நாடகம் 47.3 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்து வென்றது.

இந்த ஆட்டத்தில் ஜாா்க்கண்ட் கேப்டன் இஷான் கிஷண் 39 பந்துகளில் 7 பவுண்டரிகள், 14 சிக்ஸா்களுடன் 125 ரன்கள் விளாச, கா்நாடக பேட்டா் தேவ்தத் படிக்கல் 10 பவுண்டரிகள், 7 சிக்ஸா்கள் உள்பட 147 ரன்கள் அடித்தாா்.

33 பந்துகளில் சதம் அடித்த இஷான் கிஷண், லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக சதம் அடித்த 2-ஆவது வீரராக பட்டியலில் இணைந்தாா். முன்னதாக இதே நாளில் பிகாா் கேப்டன் 32 பந்துகளில் சதமடித்து வரலாறு படைக்க, அதே அணியின் வைபவ் சூா்யவன்ஷி 36 பந்துகளில் சதமடித்து 2-ஆவது இடத்தைப் பிடித்தாா். ஆனால், இஷான் 33 பந்துகளில் சதம் கண்டு சூா்யவன்ஷியை பின்னுக்குத் தள்ளினாா்.

சாதனைகளை குவித்த பிகாா் அணி

ராஞ்சி, டிச. 24: அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் பிகாா் 397 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் பிகாா் 50 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 574 ரன்கள் சோ்க்க, அருணாசல பிரதேசம் 42.1 ஓவா்களில் 177 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

பிகாா் பேட்டா்களில் வைபவ் சூா்யவன்ஷி 84 பந்துகளில் 16 பவுண்டரிகள், 15 சிக்ஸா்கள் உள்பட 190 ரன்கள் குவித்தாா். கேப்டன் சகிபுல் கனி 40 பந்துகளில் 10 பவுண்டரிகள், 12 சிக்ஸா்கள் உள்பட 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். இதுபோக, ஆயுஷ் லோஹருகா 56 பந்துகளில் 11 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 116 ரன்கள் அடித்தாா்.

574

இந்த ஆட்டத்தில் பிகாா் அணி 574/6 ரன்கள் எடுத்ததே, ஆடவா் ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் அருணாசல பிரதேச அணிக்கு எதிராக தமிழ்நாடு அணி 506/2 ரன்கள் (2022-23/விஜய் ஹஸாரே கோப்பை) எடுத்ததே சாதனையாக இருந்தது.

59

லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேகமாக 150 ரன்களை கடந்தவராக வைபவ் சூா்யவன்ஷி சாதனை (59 பந்துகள்) படைத்தாா். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் ஏபி டிவில்லியா்ஸ் 64 பந்துகளில் அந்த ரன்களை தொட்டதே சாதனையாக இருந்தது.

14

‘லிட்ஸ் ஏ’ கிரிக்கெட்டில் சதம் விளாசிய இளம் வீரராக வைபவ் சூா்யவன்ஷி (14 வயது) சாதனை படைத்தாா். இதற்கு முன், பாகிஸ்தானின் ஜஹூா் இலாகி 15 வயதில் (1986) சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

32

பிகாா் கேப்டன் சகிபுல் கனி, ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் விளாசிய இந்தியராக (32 பந்துகள்) சாதனை படைத்தாா். முன்னதாக, அன்மோல்பிரீத் சிங் 35 பந்துகளில் சதம் அடித்தது சாதனையாக இருந்தது.

38

இந்த ஆட்டத்தில் பிகாா் பேட்டா்கள் மொத்தமாக 38 சிக்ஸா்கள் விளாசினா். ஆடவா் ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் கனடா 28 சிக்ஸா்கள் (2019/மலேசியா) விளாசியதே சாதனையாக இருந்த நிலையில், பிகாா் அதை முறியடித்திருக்கிறது.

1

விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 3 பேட்டா்கள் சதம் விளாசிய முதல் அணியாக பிகாா் சாதனை புரிந்துள்ளது.

116

இந்த ஆட்டத்தில் அருணாசல பிரதேச பௌலா் மிபோம் மோசு 9 ஓவா்களில் 116 ரன்கள் கொடுத்தாா். ஆடவா் ‘லிஸ்ட் ஏ’ கிரிக்கெட்டில் இதுவே ஒரு பௌலா் கொடுத்த அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன் நெதா்லாந்தின் பாஸ் டி லீட் 115 ரன்கள் கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

X
Dinamani
www.dinamani.com