

இந்திய கால்பந்தின் கவலைக்கிடமான சூழ்நிலையைக் குறித்து கவனம் ஈர்க்கும் வகையில் எஃப்சி கோவா அணியினர் செய்தது வைரலாகி வருகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் நடைபெறுவதில் நிலைத்தன்மை இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஏஃப்சி சாம்பியன்ஸ் லீக்கில் தோல்வி
ஏஃப்சி சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் இந்தியாவின் எஃப்சி கோவா அணியும் தஜிகிஸ்தானின் எஃப்சி இஸ்டிக்லோல் அணியும் மோதின.
இந்தப் போட்டியில் 1-2 என தோற்றது. 8-ஆவது நிமிஷத்தில் கோவா அணி கோல் அடித்து முதல் பாதியில் 1-0 என முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதியில் 53, 56 (பெனால்டி) ஆவது நிமிஷங்களில் தஜிகிஸ்தான் அணி கோல் அடித்து 2-1 என வென்றது.
இந்தப் போட்டியின் தொடக்கத்தில் கோவா அணியினர் கீழே உட்கார்ந்து தங்களது குறையை வெளிப்படுத்தினார்கள்.
போராட்டம் ஏன்? எஃப்சி கோவா விளக்கம்
இது குறித்து எஃப்சி கோவா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
எஃப்சி கோவா வீரர்களின் இந்தச் செயல் இந்திய கால்பந்தின் நிச்சயமில்லாத தன்மையை சுட்டிக்காட்டுகிறது.
உள்ளூர் கால்பந்து போட்டிகளின் நிலைமைக்கு அதிகப்படியான கவனத்தை ஈர்க்கவே இந்தச் செயல் செய்யப்பட்டுள்ளது.
இது எங்களது எதிரணிக்கோ, எஃப்சிகோ எதிரானது அல்ல. இவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது.
இதில் பங்குதாரர்களையோ போட்டியையோ எதிர்த்தோ அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ செய்யப்பட்டதல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தீர்வு கிடைக்குமா?
ஐஎஸ்எல் ஒளிபரப்பு உரிமத்தின் ஒப்பந்தம் கடந்த டிச.8ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை நிர்வகிக்கும் எஃப்எஸ்டிஎல் இதில் லாபம் இல்லை எனக் கூறுகிறது.
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலில் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டு ஐஎஸ்எல் வியாபாரத்துக்கான டென்டர் வெளியிடப்பட்டும் இதுவரை யாருமே ஒப்பந்தம் கோரவில்லை என்ற நிலையில் இருக்கிறது.
ஏனெனில் சமீபத்திய விளையாட்டு ஒப்பந்தங்கள் மீதான புதிய சட்டத்திருத்தம் இதில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியக் கால்பந்துக் கூட்டமைப்பின் முழு அதிகாரமும் கிளப் வணிகத்தைக் கட்டுப்படுத்துவதால், அந்த உரிமையை தாங்களிடமே விட்டுவிடும்படி டிச.20-ல் 10 கிளப் அணிகள் முறையிட்டதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மெஸ்ஸி வருகைக்கு பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ரசிகர்களும் திடலை நிரப்பினார்கள். இருந்தும் இந்திய கால்பந்திற்கு ஆதரவு கிடைக்காமல் இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.