
உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான அரினா சபலென்காவுக்கு அமண்டா அனிசிமோவா அதிர்ச்சியளித்து விம்பிள்டனின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் அரையிறுதியில், உலகின் நம்பர் 1 வீராங்கனையான சபலென்காவும் 13 ஆம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவா இருவரும் மோதினர்.
கடந்த 2022 யுஎஸ் ஓபனுக்குப் பிறகு 11 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் களம் கண்ட சபலென்கா, அதில் 10-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்திருந்தார்.
இதற்கு முன்னதாக அமாண்டா அனிசிமோவா 8 முறை சந்தித்திருந்த சபலென்கா 5 முறை தோல்வியடைந்திருந்தார். இருவரும் 9-வது முறையாக மீண்டும் மோதினார்.
இருவருக்கும் இடையே 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நடந்தப் போட்டியில் சபலென்காவில் ஒவ்வொரு சர்வீஸுக்கும் அமாண்டாவும் கடுமையான பதிலடி கொடுத்தார்.
முதல் செட்டில் சபலென்காவுக்கு 6-4 என்ற கணக்கில் சவாலளித்த அமாண்டா, இரண்டாவது செட்டில் 4-6 என பின் தங்கினார். மீண்டும் கடுமையாக முன்னேறிய அமாண்டா 6-4 கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
2021 ஆம் ஆண்டில் கரோலினா பிளிஸ்கோவாவிடமும், 2023 ஆம் ஆண்டில் ஓன்ஸ் ஜபியரிடமும் தோற்ற சபலென்கா மூன்றாவது முறையாக அரையிறுதியில் தோற்று வெளியேறியுள்ளார்.
2004 ஆம் ஆண்டு செரீனா வில்லியம்ஸுக்குப் பிறகு விம்பிள்டன் ஒற்றையர் இறுதிப் போட்டியை எட்டிய இளைய அமெரிக்கப் பெண்மணி என்ற பெருமையை அனிசிமோவா அமண்டா பெற்றுள்ளார்.
5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான இகா ஸ்வியாடெக் மற்றும் பெலிண்டா பென்சிக் இடையே நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் வெற்றி பெறுபவரை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் அனிசிமோவா எதிர்கொள்ளவிருக்கிறார்.
இதையும் படிக்க : வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இலங்கை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.