வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கியது இலங்கை!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றதைப் பற்றி...
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இலங்கை அணியினர்.
வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் இலங்கை அணியினர்.
Published on
Updated on
2 min read

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை அணி ஒருநாள் தொடரில் 2-1 என்று வென்ற நிலையில், இவ்விரு அணிகள் மோதும் முதலாவது டி20 போட்டி பல்லேகலே திடலில் இன்று நடைபெற்றது.

டாஸ்

இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா வங்கதேச அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பர்வேஸ் ஹொசைன் மற்றும் தன்சித் ஹாசன் இருவரும் நிதானமாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 46 ரன்களாக இருந்தபோது தன்சித் 2 பவுண்டரிகளுடன் 16 ரன்கள் எடுத்து வெளியேற, கேப்டன் லிட்டன் தாஸ் வெறும் 6 ரன்களில் வாண்டர்சே பந்துவீச்சில் வீழ்ந்தார்.

வங்கதேசம் திணறல்

சிறிது நேரம் அதிரடி காட்டிய பர்வேஸ் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். தவ்ஹித் ஹிரிதோய் 10 ரன்களிலும், மெஹதி ஹசன் 29 ரன்களிலும் வெளியேற, கடைசி வரைப் போராடிய முகமது நைம் 29 பந்துகளில் 32 ரன்களிலும், ஷமிம் ஹொசைன் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. இலங்கை அணித் தரப்பில் தீக்‌ஷனா 2 விக்கெட்டுகளும், துஷாரா, ஷனகா, வாண்டர்சே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கைக்கு அதிரடி வெற்றி

பின்னர், 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை வீரர்கள் வங்கதேச அணியின் பந்துவீச்சைச் சிதறடித்தனர். பதும் நிஷங்கா ஆட்டம் தொடங்கிய முதல் மூன்று பந்துகளை பவுண்டரிக்கு விளாசி தனது ரன் கணக்கைத் துவங்கினார்.

சிக்ஸர் - பவுண்டரிகளை விளாசிய நிஷங்கா 4 -வது ஓவரில் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி என 18 ரன்கள் குவித்தார். அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிஷங்கா 16 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளில் 42 ரன்கள் எடுத்து மெஹிதி ஹசன் பந்துவீச்சில் வீழ்ந்தார். அவருக்குப் பின்னர் வந்த குஷல் பெரேரா 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தொடக்கம் முதலே நிதானமாகவும், அதே நேரத்தில் அதிரடியாகவும் ஆடிய விக்கெட் கீப்பர் குஷல் மெண்டிஸ் அரைசதம் விளாசி அசத்தினார். 51 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 73 ரன்கள் விளாசிய குஷல் மெண்டிஸ், சைஃபுதின் பந்துவீச்சில் வீழ்ந்தார்.

அவிஷ்கா பெர்னாண்டோ 11 ரன்களிலும், சரித் அசல்ங்காவுக்கு 8 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

19 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

Sri Lanka started the T20 series with a win!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com