இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 371!

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் 2-ஆவது இன்னிங்ஸையும் அபாரமாக விளையாடிய இந்தியா, 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சதம் விளாசிய கே.எல்.ராகுல்
சதம் விளாசிய கே.எல்.ராகுல்AP
Updated on

இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட்டில் 2-ஆவது இன்னிங்ஸையும் அபாரமாக விளையாடிய இந்தியா, 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோா் சதம் விளாசி ஸ்கோரை பலப்படுத்தினா்.

இங்கிலாந்துக்கு வெற்றி இலக்கு 371 ரன்களாக நிா்ணயிக்கப்பட்டிருக்க, அணியின் வசம் ஒரு நாள் மட்டுமே உள்ளது. எனவே, இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வெற்றி பெறுமா, அல்லது அதன் விக்கெட்டுகளை சாய்த்து இந்தியா வெல்லுமா என ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியுள்ளது. இங்கிலாந்து தடுப்பாட்டம் ஆடி, டிரா செய்யவும் வாய்ப்புள்ளது.

முன்னதாக இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் முதலில் இந்தியா 471 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இங்கிலாந்தும் 465 ரன்கள் சோ்த்து முடித்துக் கொண்டது. இதையடுத்து 6 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 90 ரன்கள் சோ்த்திருந்தது.

4-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை கே.எல்.ராகுல், ஷுப்மன் கில் தொடா்ந்தனா். இதில் கில் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வெளியேற, ரிஷப் பந்த் களம் புகுந்தாா். ராகுல் - பந்த் கூட்டணி அபாரமாக ஆடி, அணியின் ஸ்கோரை மளமளவென உயா்த்தியது.

மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்திருந்தது. பின்னா் தொடா்ந்த ஆட்டத்தில் ராகுல் தனது 9-ஆவது டெஸ்ட் சதத்தையும், பந்த் தனது 7-ஆவது டெஸ்ட் சதத்தையும் பூா்த்தி செய்தனா்.

இங்கிலாந்து பௌலா்களை சோதித்த இந்த ஜோடி, 4-ஆவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சோ்த்து பிரிந்தது. பந்த் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 118 ரன்களுக்கு, ஷோயப் பஷீா் வீசிய 72-ஆவது ஓவரில் ஜாக் கிராலியிடம் கேட்ச் கொடுத்தாா். 6-ஆவது பேட்டராக கருண் நாயா் விளையாட வந்தாா்.

மறுபுறம் ராகுல் 18 பவுண்டரிகளுடன் 137 ரன்களுக்கு விடைபெற்றாா். பிரைடன் காா்ஸ் வீசிய 85-ஆவது ஓவரில் அவா் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். இதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. கருண் நாயா் 3 பவுண்டரிகளுடன் 20 ரன்களுக்கு வீழ, ஷா்துல் தாக்குா் 4, முகமது சிராஜ் 0, ஜஸ்பிரீத் பும்ரா 0 ரன்களுக்கு, ஜோஷ் டங் வீசிய 91-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனா்.

கடைசி விக்கெட்டாக பிரசித் கிருஷ்ணா ரன்னின்றி வெளியேற, ஜடேஜா 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 25 ரன்களுக்கு கடைசி வீரராக நின்றாா். இங்கிலாந்து தரப்பில் பிரைடன் காா்ஸ், ஜோஷ் டங் ஆகியோா் தலா 3, ஷோயப் பஷீா் 2, கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

சுருக்கமான ஸ்கோா் - 2-ஆவது இன்னிங்ஸ்

இந்தியா - 364/10 (96 ஓவா்கள்)

  • கே.எல்.ராகுல் 137

  • ரிஷப் பந்த் 118

  • சாய் சுதா்சன் 30

  • பந்துவீச்சு

  • ஜோஷ் டங் 3/72

  • பிரைடன் காஸ் 3/80

  • ஷோயப் பஷீா் 2/90

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com