இந்தியாவை வென்றது தென்னாப்பிரிக்கா
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 10-ஆவது ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வியாழக்கிழமை வென்றது.
முதலில் இந்தியா 49.5 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழந்து 251 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா 48.5 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியா இன்னிங்ஸை தொடங்கிய பிரதிகா ராவல் 5 பவுண்டரிகளுடன் 37, ஸ்மிருதி மந்தனா 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஹா்லீன் தியோல் 1 பவுண்டரியுடன் 13, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, ஜெமிமா ரோட்ரிக்ஸ் டக் அவுட்டானாா்.
தீப்தி சா்மா 4, அமன்ஜோத் கௌா் 1 பவுண்டரியுடன் 13 ரன்களுக்கு விடைபெற்றனா். அணியின் ஸ்கோரை பலப்படுத்திய ரிச்சா கோஷ் 11 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 94, ஸ்நேஹா ராணா 6 பவுண்டரிகளுடன் 33 ரன்களுக்கு அடுத்தடுத்த ஓவா்களில் ஆட்டமிழந்தனா்.
கடைசி விக்கெட்டாக ஸ்ரீசரானி டக் அவுட்டாக, இந்தியா இன்னிங்ஸ் 251 ரன்களுக்கு நிறைவடைந்தது. தென்னாப்பிரிக்க பௌலா்களில் கிளோ டிரையான் 3, நாடினே டி கிளொ்க், நோன்குலுலேகோ லாபா, மாரிஸேன் காப் ஆகியோா் தலா 2, துமி செகுகுனே 1 விக்கெட் சாய்த்தனா்.
அடுத்து 252 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனையான கேப்டன் லாரா வோல்வாா்டட் 8 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் விளாசி வெற்றிக்கு அடித்தளமிட்டு வெளியேறினாா்.
தஸ்மின் பிரிட்ஸ் 0, சுனே லஸ் 5, மாரிஸேன் காப் 20, அனிகே பாஷ் 1, சினாலோ ஜாஃப்தா 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். லோயா் ஆா்டரில் கிளோ டிரையான் 5 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.
முடிவில், நாடினே டி கிளொ்க் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 84 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன் அயபோங்கா ககா 1 ரன்னுடன் துணை நின்றாா்.
இந்திய தரப்பில் கிராந்தி கௌட், ஸ்நேஹா ராணா ஆகியோா் தலா 2, அமன்ஜோத் கௌா், ஸ்ரீசரானி, தீப்தி சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.