

புரோ கபடி லீக்கில் புணேரி பால்டனை வீழ்த்தி டபாங் தில்லி அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
12-வது புரோ கபடி லீக் தொடர் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கியது.
முதற்கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்திலும், அடுத்த கட்ட ஆட்டங்கள் முறையே ஜெய்ப்பூர், சென்னை, தில்லி ஆகிய நகரங்களிலும் நடைபெற்றன.
இந்தத் தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் தில்லி கே.சி., குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் யுபி யோதாஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்றிருந்தன.
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் தில்லி, புணேரி பால்டன் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இன்று தில்லியில் உள்ள தியாகராஜ உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த இறுதிப்போட்டியில் தபாங் தில்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் தில்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.
அதனைத் தொடக்கத்தில் இருந்தே தக்கவைத்துக்கொண்ட தபாங் தில்லி அணி, பரபரப்பான ஆட்டத்தில் நேர முடிவில் 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
தில்லி அணியில் நீரஜ் நர்வால் 9 புள்ளிகளையும், புணே அணியில் ஆஷிஷ் ஷிண்டே 10 புள்ளிகளையும் எடுத்தனர்.
சிறந்த வீரர்கள்
பெங்களூரு புல்ஸ் அணியின் தீபக் சங்கர் தொடரில் சிறந்த புதிய இளம் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தடுப்பாட்டக்காரராக நவ்தீப் தேர்வு செய்யப்பட்டார்.
பாட்னா பைரேட்ஸ் அணியின் அயன் லோச்சாப், தொடரின் சிறந்த ரைடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தத் தொடரில் மட்டும் மொத்தமாக 316 ரெய்டு புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
பரிசுத் தொகை
புரோ கபடி லீக்கின் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ. 3 கோடி, இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு ரூ. 1.8 கோடியும் பரிசாக வழங்கப்படும். 12 அணிகளில் முதல் இரண்டு இடங்களைத் தவிர மற்ற அணிகளுக்கு தலா ரூ. 1 கோடி வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.