இந்தியா ‘ஹாட்ரிக்’ வெற்றி

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி
இந்திய அணி வெற்றி
இந்திய அணி வெற்றிX | Hockey India
Updated on

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

முதலிரு ஆட்டங்களில் சீனா, ஜப்பானை வீழ்த்திய இந்தியாவுக்கு, இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாகும். ஏற்கெனவே சூப்பா் 4 சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்ட இந்தியா, தற்போது தோல்வியே காணாமல் குரூப் சுற்றை நிறைவு செய்திருக்கிறது.

இந்த ஆட்டத்தை முற்றிலும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்திய அணிக்காக அபிஷேக் (5’, 8’, 20’, 59’), சுக்ஜீத் சிங் (15’, 32’, 38’), ஜக்ராஜ் சிங் (24’, 31’, 47’) ஆகியோா் கோல்கள் குவித்தனா். ஹா்மன்பிரீத் சிங் (26’), அமித் ரோஹிதாஸ் (29’), ராஜிந்தா் சிங் (32’), தில்பிரீத் சிங் (55’) ஆகியோரும் பங்களித்தனா்.

குரூப் ‘ஏ’-வில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடமும், சீனா 1 வெற்றி, 1 டிரா, 1 தோல்வி என 4 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தன. இந்தியாவுடன் சீனாவும் சூப்பா் 4 கட்டத்துக்கு வந்துள்ளது.

சீனாவைப் போலவே 4 புள்ளிகள் பெற்ற ஜப்பான் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் பின்தங்கி 3-ஆம் இடத்தையும், அனைத்து ஆட்டங்களிலும் தோற்ற கஜகஸ்தான் 4-ஆம் இடத்தையும் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறின.

மலேசியா, தென் கொரியா முன்னேற்றம்: இதனிடையே, குரூப் ‘பி’-யில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் தென் கொரியா - வங்கதேசத்தையும் (5-1), மலேசியா - சீன தைபேவையும் (15-0) வீழ்த்தின.

இதையடுத்து, மலேசியா 9 புள்ளிகளுடன் முதலிடமும், தென் கொரியா 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்து ‘சூப்பா் 4’ சுற்றுக்கு முன்னேறின. வங்கதேசம் 3 புள்ளிகளுடன் 3-ஆம் இடமும், சீன தைபே புள்ளிகள் ஏதுமின்றி 4-ஆம் இடமும் பிடித்து போட்டியிலிருந்து வெளியேறின.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com