
தமிழ் தலைவாஸ் அணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், நட்சத்திர ரைடரும் அணித் தலைவருமான பவன் செஹ்ராவத் அணியைவிட்டு வெளியேறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியான தகவல்படி, பவன் அணியின் ஜெய்ப்பூர் சுற்றுப்போட்டிக்கான பயணத்தில் கலந்து கொள்ளாமல், யாருக்கும் தெரிவிக்காமல் முகாமை விட்டு வெளியேறி சென்றதாகக் கூறப்படுகிறது.
அணி நிர்வாகத்துக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் இப்படிப்பட்ட முடிவெடுத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டனாக பவன் செஹ்ராவத் கடந்த மாதம் நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது அணியை விட்டு வெளியேறியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
பவனின் சிறப்பான சாதனைகள்
பவன் செஹ்ராவத் புரோ கபடி லீக் வரலாற்றில் மிக அதிக ரெய்டு புள்ளிகள் பெற்றவர்களில் ஒருவராக திகழ்கிறார். இதுவரை அவர் 1,340 ரெய்டு புள்ளிகள் குவித்துள்ளார்.
சீசன் 6-இல், பெங்களூரு புல்ஸ் அணிக்கு முதல் சாம்பியன் பட்டத்தை வெல்லச் செய்து, அந்த சீசனின் மிக மதிப்புமிக்க வீரர் விருதை செஹ்ராவத் பெற்றது குறிப்பிடத்தக்கது
சீசன் 7-இல், 353 புள்ளிகளுடன் அதிகபட்ச ரெய்டு புள்ளிகள் பெற்றார்.
ஹரியானா ஸ்டீலர்ஸுக்கு எதிராக ஒரே ஆட்டத்தில் 39 ரெய்டு புள்ளிகள் எடுத்து, புரோ கபடி லீக் வரலாற்றில் தனித்துவமான சாதனையை படைத்தார்.
தலைவாஸ் அணியின் நிலை
தற்போது தமிழ் தலைவாஸ், மூன்று ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே பெற்று, புள்ளி அட்டவணையில் 10-வது இடத்தில் உள்ளது. தொடக்கத்தில் தெலுங்கு டைட்டன்ஸை வென்றாலும், பின்னர் யு மும்பா மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸிடம் தோல்வியடைந்தனர்.
தமிழ் தலைவாஸ் அணி நாளை (செப்டம்பர் 12) நடைபெறும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸை எதிர்கொள்ளவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.