

ஊக்கமருந்து பயன்படுத்தியதாக தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகருக்கு 8 ஆண்டுகள் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டு ஊக்கமருந்து பயன்படுத்தியதாக 3 ஆண்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஊக்கமருந்து புகாரில் தனலட்சுமி சிக்கியுள்ளார்.
தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமி சேகர், 3 ஆண்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடை முடிந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். தற்போது நடந்த ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார்.
அதாவது, இரண்டாவது முறையாக எழுந்த புகாரில் ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் உறுதியானதால், 8 ஆண்டுகள் போட்டியில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரது மாதிரிகள் ஜூலை 27 அன்று நடந்த இந்திய ஓபன் தடகளப் போட்டியில் சேகரிக்கப்பட்டன.
திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி சேகர் தேசிய தடகள போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் போட்டிக்குத் தேர்வாகி இருந்தார். கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பை தொடரில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23.26 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.