

மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் நீக்கப்பட்டது அதன் ரசிகர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதுதான் மான்செஸ்டர் யுனைடெட் அணி ஓரளவுக்கு நன்றாக விளையாடி வந்த நிலையில் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர்ச்சுகலைச் சேர்ந்த ரூபன் அமோரியம் (39 வயது) மிகவும் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர், மேலாளர் ஆவார். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளராகப் பொறுப்பேற்றார்.
இவரது தலைமையில் யுனைடெட் அணி 63 போட்டிகளில் 24 வெற்றி, 18 தோல்வி, 21 சமன் என சுமாரான செயல்பாடுகளைக் கொடுத்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளை விடவும் மான்செஸ்டர் யுனைடெட் அணி தற்போது சிறப்பாகவே விளையாடி வந்தது.
தன்னுடைய கருத்துகளில் மிகவும் பிடிவாதமாக இருக்கும் இவர் யுனைடெட் ரசிகர்கள், வீரர்களிடம் மிகுந்த அன்பைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாள்களுக்கு முன்பாக ரூபன் அமோரியம், “ நான் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மேலாளர் மட்டுமே. தலைமைப் பயிற்சியாளர் அல்ல. அனைவரும் தங்களது வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.
வீரர்களைத் தேடி எடுக்கும் ஸ்கௌட் அணியினர், உதவியாளர்கள் இப்படி அனைவரும் தங்களது வேலையைச் சரியாக செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
கிளப் தலைவர்களை விமர்சித்ததாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்த நாளே இவரை அணியிலிருந்து நீக்கியது மான்செஸ்டர் யுனைடெட்.
பிரீமியர் லீக் வரலாற்றிலேயே அதிகமுறை சாம்பியனான இந்த அணிக்கு கடுமையான காலமாகவே இருந்து வருகிறது. அதைச் சீர்செய்துவந்த ரூபன் அமோரியத்தையும் வெளியேற்றிய கிளப்பின் செயலுக்கு கால்பந்து ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.