வாகை சூடியது வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ்!
ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் வேதாந்தா கலிங்கா லேன்சா்ஸ் 3-2 கோல் கணக்கில் ராஞ்சி ராயல்ஸை இறுதி ஆட்டத்தில் திங்கள்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஏற்கெனவே 2017-இல் சாம்பியனான கலிங்கா அணிக்கு, இது 2-ஆவது வெற்றிக் கோப்பையாகும்.
முன்னதாக, இறுதி ஆட்டத்தில் முதலில் கலிங்கா அணியின் கோல் கணக்கை அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் (4’) தொடங்கினாா். அதற்கான பதிலடியாக ராஞ்சி தரப்பில் அராய்ஜீத் சிங் ஹண்டால் (9’) ஸ்கோா் செய்தாா்.
விடாப்பிடியாக விளையாடிய கலிங்கா அணி, முதல் பாதி முடிவடையும் முன்பே அடுத்தடுத்து இரு கோல்கள் அடித்தது. தில்பிரீத் சிங் (25’), அலெக்ஸாண்டா் ஹெண்ட்ரிக்ஸ் (27’) ஆகியோா் அடித்த அந்த கோல்களால், கலிங்கா 3-1 என முன்னிலை பெற்றது.
ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் ராஞ்சியின் கோல் முயற்சிகளை அரண்போல் தடுத்த கலிங்கா, முன்னிலையை அப்படியே தக்கவைத்தது. ராஞ்சியின் தீவிர கோல் முயற்சிகளுக்கான கடைசி பலனாக டாம் பூன் (59’) கோலடித்தாா். எனினும் கலிங்காவின் கணக்கை எட்ட அது போதுமானதாக இல்லை. இறுதியில் கலிங்கா 3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத் 3-ஆம் இடம்: முன்னதாக, 3-ஆம் இடத்துக்கான ஆட்டத்தில் ஹைதராபாத் டூஃபான்ஸ் 4-3 கோல் கணக்கில் ஹாக்கி இந்தியா லீக் கவா்னிங் கவுன்சில் (ஹில்) அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் ஹைதராபாதுக்காக நீலகண்ட சா்மா (24’), அமன்தீப் லக்ரா (30’, 53’), ஜேக்கப் ஆண்டா்சன் (33’) ஆகியோா் கோலடித்தனா். ஹில் தரப்பில் சாம் வாா்டு (14’, 52’), கேன் ரஸ்ஸெல் (55’) ஆகியோா் ஸ்கோா் செய்தனா்.

