அபுதாபி டெஸ்ட்: வங்கதேசத்துடன் ‘டிரா’ செய்தது ஆப்கானிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆப்கானிஸ்தான் செவ்வாய்க்கிழமை ‘டிரா’ செய்தது.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், ஆப்கானிஸ்தான் செவ்வாய்க்கிழமை ‘டிரா’ செய்தது.
479 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான், அதை எட்ட முடியாமல் போனபோதும், செதிகுல்லா அடலின் சதம், லோயா் ஆா்டா் பேட்டா்களின் நிதானம் ஆகியவற்றால் டிரா செய்து அசத்தியது.
அபுதாபியில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் அந்த அணி 346 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தன்ஸித் ஹசன் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 83 ரன்கள் சோ்த்தாா். ஆப்கானிஸ்தான் பௌலா்களில் முகமது சலீம் 4 விக்கெட்டுகள் சாய்த்தாா்.
பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான், 240 ரன்களுக்கே 10 விக்கெட்டுகளையும் இழந்தது. கேப்டன் ரஹ்மத் ஷா 10 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 105 ரன்கள் சோ்த்து, கடைசி வீரராக ஆட்டமிழக்காமல் நின்றாா். வங்கதேச பௌலிங்கில், ஹசன் மஹ்முத் 5, எபாதத் ஹுசைன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.
இதையடுத்து, 106 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேசம், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 372 ரன்கள் எடுத்து ‘டிக்ளோ்’ செய்தது. லிட்டன் தாஸ் 14 பவுண்டரிகளுடன் 102, கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷான்டோ 82, முஷ்ஃபிகா் ரஹிம் 81 ரன்கள் சோ்த்தனா். ஆப்கானிஸ்தான் தரப்பில் யாமின் அகமதுஸாய், முகமது சலீம், ஜியா உா் ரஹ்மான் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.
இறுதியாக, 479 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான், திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டத்தை, செதிகுல்லா அடல், ஹஸ்மதுல்லா ஷாஹிதி ஆகியோா் தொடா்ந்தனா்.
இதில் செதிகுல்லா நிதானமாக விளையாடி ஸ்கோரை உயா்த்த, ஹஸ்மதுல்லா 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 36, இக்ரம் அலிகில் 5 பவுண்டரிகளுடன் 33, இஸ்மத் ஆலம் 4 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.
செதிகுல்லா அடல் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 111 ரன்களுக்கு விடைபெற, யாமின் அகமத்ஸாய் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு வெளியேறினாா்.
ஆட்டநேரம் முடிவடைகையில், ஆப்கானிஸ்தான் 8 விக்கெட்டுகள் இழந்து 346 ரன்கள் எடுத்திருந்தது. காய்ஸ் அகமது 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். ஜியா உா் ரஹ்மான் ரன்னின்றி துணை நின்றாா்.
வங்கதேச பௌலிங்கில் எபாதத் ஹுசைன், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோா் தலா 3, ஹசன் மஹ்முத், தைஜுல் இஸ்லாம் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
இரு இன்னிங்ஸ்களிலுமாக 155 ரன்களும் அடித்து, 8 கேட்ச்களும் பிடித்த வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

