ஐசியூவில் இரு நாள்களுக்குச் சிகிச்சை எடுத்த பிறகு அரையிறுதியில் விளையாடிய பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான்

தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு இரவுகளைக் கழித்து சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
ஐசியூவில் இரு நாள்களுக்குச் சிகிச்சை எடுத்த பிறகு அரையிறுதியில் விளையாடிய பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் விளையாடும் முன்பு பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான், மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரு நாள்களுக்குச் சிகிச்சை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய அந்த அணி, இறுதிச்சுற்றில் நியூஸிலாந்துடன் மோதுகிறது. துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் அடிக்க, அடுத்து ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் அடித்து வென்றது. பாகிஸ்தான் இன்னிங்ஸில் முகமது ரிஸ்வான் 67 ரன்களும் ஃபகார் ஸமான் 55 ரன்களும் பாபர் ஆஸம் 39 ரன்களும் எடுத்தார்கள். ஆஸி. இன்னிங்ஸில் வார்னர் 49, ஸ்டாய்னிஸ் 40, மேத்யூ வேட் 41 ரன்களும் எடுத்தார்கள். 

அரையிறுதி ஆட்டத்துக்கு முன்பு பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வானும் சோயிப் மாலிக்கும் சளிக்காய்ச்சலால் அவதிப்பட்டார்கள். இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை எனத் தெரிய வந்தது. புதன் அன்று காலையில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார்கள். இதனால்அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. இருவருடைய உடற்தகுதியை முன்வைத்து பாகிஸ்தான் அணி இதுகுறித்த முடிவை எடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இறுதியில், உடற்தகுதித் தேர்வில் ரிஸ்வானும் மாலிக்கும் தேர்ச்சி அடைந்து அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்றார்கள்.

இந்நிலையில் பாகிஸ்தான் தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான் இரு நாள்கள் ஐசியூவில் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகே அரையிறுதியில் கலந்துகொண்ட தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியின் மருத்துவர் நஜீபுல்லா சூம்ரோ, இதுபற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நவம்பர் 9 அன்று ரிஸ்வானுக்கு நெஞ்சுப் பகுதியில் கிருமித் தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ.) இரு இரவுகளைக் கழித்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். விரைவில் குணமாகி அரையிறுதியில் விளையாடத் தகுதியடைந்தார். அவருடைய உடல்நலம் குறித்த முடிவை அணி நிர்வாகம் எடுத்தது. அணியின் மன உறுதி தொடர்புடையது என்பதால் இத்தகவலை வெளியே சொல்லவில்லை. அணிக்காக விளையாடுவதில் ரிஸ்வான் உறுதியாக இருந்தார். அவர் எப்படி விளையாடினார் என்பதை அனைவரும் பார்த்தோம் என்றார்.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் 6 ஆட்டங்களில் 281 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளார் ரிஸ்வான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com