உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள இரு பாகிஸ்தான் வீரர்கள்: அரையிறுதியில் விளையாடுவார்களா?
By DIN | Published On : 11th November 2021 12:11 PM | Last Updated : 11th November 2021 12:11 PM | அ+அ அ- |

ரிஸ்வான்
டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தானும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான முகமது ரிஸ்வானும் சோயிப் மாலிக்கும் சளிக்காய்ச்சலால் அவதிப்படுகிறார்கள். இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கரோனா இல்லை எனத் தெரிய வந்துள்ளது. புதன் அன்று காலையில் இருவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பயிற்சியில் பங்கேற்பதைத் தவிர்த்தார்கள். இதனால் இன்றைய அரையிறுதி ஆட்டத்தில் இருவரும் பங்கேற்பார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருவருடைய உடற்தகுதியை முன்வைத்து பாகிஸ்தான் அணி இதுகுறித்த முடிவை எடுக்கவுள்ளது.
இருவரில் ஒருவர் விளையாடாமல் போனாலும் பாகிஸ்தான் அணிக்குப் பின்னடைவாக இருக்கும். டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் முகமது ரிஸ்வான் 3-ம் இடத்தில் உள்ளார். குறைந்த பந்துகளில் அரை சதம் எடுத்த பாகிஸ்தான் வீரர் என்கிற பெருமையை ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அடைந்தார் சோயிப் மாலிக். பாகிஸ்தான் அணியின் நடுவரிசையில் முக்கிய வீரராகவும் உள்ளார்.
ரிஸ்வானால் இன்று விளையாட முடியாமல் போனால் விக்கெட் கீப்பரும் முன்னாள் கேப்டனுமான சர்பராஸ் அகமது அணியில் சேர்க்கப்படுவார். சோயிப் மாலிக்குக்குப் பதிலாக ஹைதர் அலி சேர்க்கப்பட்டு, ஃபகார் ஸமான் தொடக்க வீரராகக் களமிறக்கப்படுவார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...