நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதே அவரின் இலக்காக இருந்தது: ரிஸ்வானை பார்த்து வியந்த இந்திய மருத்துவர்

இந்த பாதிப்பிலிருந்து குணமடைய 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும். அரையிறுதியில் விளையாட வேண்டும் என்பதே அவரது இலக்காக இருந்தது. மனவலிமை, நம்பிக்கையால் ரிஸ்வான் வெறும் 35 மணி நேரத்தில் குணமடைந்தார்.
முகமது ரிஸ்வான் (கோப்புப்படம்)
முகமது ரிஸ்வான் (கோப்புப்படம்)

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவந்த டி20 உலகக் கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சிறப்பாக விளையாடிவந்த பாகிஸ்தான், யாரும் எதிர்பாராத விதமாக, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

முன்னதாக, இந்தியா தொடங்கி நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் என அனைத்து அணிகளையும் தோல்வி அடைய செய்த பாகிஸ்தான், 10 புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றது. 

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பாகிஸ்தான் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியிருந்தது. இருப்பினும், இதே ஆட்டத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானால் வெளிப்படுத்த முடியவில்லை.

இந்த அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வானின் சிறப்பாக விளையாடி இருந்தார். 52 பந்துகளில் 67 ரன்கள் குவித்த ரிஸ்வான் பாகிஸ்தான் அணிக்கு வலுவான ஒரு தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். 

பாகிஸ்தான் இந்த போட்டியில் தோற்ற போதிலும், முகமது ரிஸ்வானை பலரும் பாராட்டினர். ஏனென்றால், அரையிறுதி போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பு வரை அவர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். அப்படியிருந்தும் கூட அரையிறுதியில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

அரையிறுதி போட்டிக்கு சில நாட்களுக்கு முன், ரிஸ்வானுக்கு திடீரென தீவிர காய்ச்சல், இருமல், மார்பு இறுக்கம் ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக துபாயில் உள்ள மீடியோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இந்தியாவைச் சேர்ந்த நுரையில் சிறப்பு வல்லுநரான சஹீர் சைனு லாபுதீன் சிகிச்சை அளித்துள்ளார். 

ரிஸ்வானின் மன வலிமை ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது எனக் கூறி அவர் வியப்படைந்துள்ளார். இது குறித்து சஹீர் சைனுலாபுதீன் கூறுகையில், "முக்கியமான அரையிறுதி போட்டியில் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதில் முகமது ரிஸ்வான் மிக உறுதியாக இருந்தார்.

அவர் மிக விரைவில் குணமடைய அவரது மன வலிமையும் நம்பிக்கையும் தான் முக்கிய காரணமாக இருந்தது. அவர் இவ்வளவு சீக்கிரம் குணமடைவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தோம்.

 பொதுவாக இந்த பாதிப்பில் இருந்து குணமடைய 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும். அரையிறுதியில் விளையாட வேண்டும் என்பது மட்டுமே அவரது இலக்காக இருந்தது. மனவலிமை, நம்பிக்கையால் ரிஸ்வான் வெறும் 35 மணி நேரத்தில் முற்றிலுமாக குணமடைந்தார். அவரின் உடல்நலத்தை ஆய்வு செய்து புதன்கிழமை மதியம் அவரை டிஸ்சார்ஜ் செய்தோம்.

முக்கியமான கிரிக்கெட் தொடர் நடக்கும் போது வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு வருவதை நாங்கள் பார்த்துள்ளோம். ஆனால், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இவ்வளவு விரைவாகக் குணமடைந்தது இதுவே முதல் முறை. அவர் அரையிறுதி போட்டியில் ஒவ்வொரு ரன்களை எடுக்கும்போதும் அது எங்களுக்குப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com