சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்: பப்புவா நியூ கினியா படுதோல்வி

டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்: பப்புவா நியூ கினியா படுதோல்வி


டி20 உலகக் கோப்பையில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டி20 உலகக் கோப்பையின் 9-வது ஆட்டத்தில் வங்கதேசம், பப்புவா நியூ கினியா அணிகள் வியாழக்கிழமை மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது.

கேப்டன் மஹமதுல்லா 28 பந்துகளில் 50 ரன்களும், ஷகிப் அல் ஹசன் 37 பந்துகளில் 46 ரன்களும் எடுத்தனர். 

182 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பப்புவா நியூ கினியா ஆரம்பம் முதல் சரிவைக் காணத் தொடங்கியது. 29 ரன்களுக்குள் அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

விக்கெட் கீப்பர் கிப்லின் டோரிகா மட்டும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 34 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். சாட் சேபர் 11 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் 10 ரன்களைக்கூடத் தொடவில்லை.

இதனால், அந்த அணி 19.3 ஓவர்கள் முடிவில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 

வங்கதேச அணித் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது மற்றும் முகமது சைபுதின் தலா 2 விக்கெட்டுகளையும் மெஹதி ஹாசன் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

உலகக் கோப்பை முதல் சுற்றில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் புள்ளிகள் பட்டியலில் 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com