நமீபியாவா அயர்லாந்தா?: டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் கடைசி நாளில் பரபரப்பு

நமீபியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும்...
அயர்லாந்து அணி
அயர்லாந்து அணி

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. 

தகுதிச்சுற்று ஆட்டங்கள் முதல் சுற்று ஆட்டங்களாக அழைக்கப்படுகின்றன. வங்கதேசம், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், பப்புவா நியூ கினியா என 8 அணிகள் முதல் சுற்று ஆட்டத்தில் கலந்துகொள்கின்றன. குரூப் ஏ பிரிவில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய அணிகளும் குரூப் பி பிரிவில் வங்கதேசம், ஸ்காட்லாந்து, ஓமன், பப்புவா நியூ கினியா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவில் ஸ்காட்லாந்தும் வங்கதேச அணியும் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவின் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகின்றன.

நமீபிய அணி
நமீபிய அணி

இன்று மதியம் நடைபெறும் ஆட்டத்தில் நமீபியாவும் அயர்லாந்தும் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் இலங்கையும் நெதர்லாந்தும் மோதுகின்றன. ஏற்கெனவே விளையாடிய இரு ஆட்டங்களிலும் நெதர்லாந்து தோற்றுள்ளது. அதனால் அந்த அணியால் சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற முடியாது. இலங்கை அணி இதுவரை விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

இதனால் நமீபியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்திய நேரம் 3.30 மணிக்குத் தொடங்கும் இந்த ஆட்டத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.  வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற கட்டாயம் இரு அணிகளுக்கும் உள்ளது. 

2012-க்குப் பிறகு டி20 உலகக் கோப்பையின் பிரதான சுற்றுக்கு அயர்லாந்து தகுதி பெற்றதில்லை. நெதர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்ற நமீபியா அணி மீண்டும் இந்த ஆட்டத்தில் அதே உற்சாகத்துடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதிச்சுற்றின் கடைசி நாளில் இந்த ஆட்டம் இரு அணிகளுக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com