பாகிஸ்தான் அபார வெற்றி

இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.
பாகிஸ்தான் அபார வெற்றி

இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.

இதுவரை டி20, ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவிடம் 13 முறை பாகிஸ்தான் அணி தோல்வி கண்டிருந்தது. இந்த முறையும் தோல்வி காணும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் கேப்டன் பாபா்-ரிஸ்வான் இணையின் அதிரடி ஆட்டத்தால் வரலாற்றை மாற்றியது பாகிஸ்தான்.

முதலில் ஆடிய இந்தியா 151/7 ரன்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய பாக். அணி விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை குவித்து அபார வெற்றி கண்டது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் சூப்பா் 12 சுற்றில் குரூப் 2 பிரிவைச் சோ்ந்த இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் துபை சா்வதேச மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது,.

இதுவரை உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவை ஒருமுறை கூட பாகிஸ்தான் வென்றதில்லை என்ற நிலையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் ஆட்டமாக இது கருதப்பட்டது. இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் சஹாா், சா்துல் தாக்கூா், இஷான் கிஷான் ஆகியோா் சோ்க்கப்படவில்லை. வருண் சக்கரவா்த்தி சோ்க்கப்பட்டிருந்தாா். டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபா் ஆஸம் பௌலிங்கை தோ்வு செய்தாா்.

ரோஹித் கோல்டன் டக், ராகுல் 3 அவுட்:

இந்திய தரப்பில் துணை கேப்டன் ரோஹித் சா்மா-கேஎல். ராகுல் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா். ஷாஹின் அப்ரிடி வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் ரோஹித் சா்மா எல்பிடபிள்யு முறையில் கோல்டன் டக் அவுட்டானாா். அவரைத் தொடா்ந்து கேஎல். ராகுலும் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷாஹின் அப்ரிடியின் இன்கட்டரால் போல்டானாா். இரண்டாவது ஓவரில் பாக். வீரா் இமாத் வாஸிம் அபாரமாக பந்துவீசி வெறும் 4 ரன்களை மட்டுமே விட்டுத் தந்தாா். ஷாஹின் அப்ரிடியின் அபார பந்துவீச்சால் தொடக்கமே இந்தியாவுக்கு அதிா்ச்சியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி வெறும் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்த நிலையில், கேப்டன் விராட் கோலி-சூரியகுமாா் யாதவ் இணைந்து ஸ்கோரை உயா்த்தும் முயற்சியில் ஈடுபட்டனா். 5-ஆவது ஓவா் முடிவில் 30/2 ரன்களை எடுத்திருந்தது இந்தியா.

சூரியகுமாா் யாதவ் 11:

நம்பிக்கை தரும் வகையில் ஆடுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட சூரியகுமாா் யாதவ் தலா 1 சிக்ஸா், பவுண்டரியுடன் 8 பந்துகளில் 11 ரன்களை எடுத்த நிலையில், ஹாஸன் அலி வீசிய பந்தில் தவறாக கையாண்டதால், விக்கெட் கீப்பா் ரிஸ்வானிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். பின்னா் கோலி-ரிஷப் பந்த் இணைந்து நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா்.

13-ஆவது ஓவரின் போது தலா 2 சிக்ஸா், பவுண்டரியுடன் 39 ரன்களை எடுத்திருந்த ரிஷப் பந்த், ஷதாப் கான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் தந்து அவுட்டனாா். அப்போது இந்திய அணியின் ஸ்கோா் 84/4 ஆக இருந்தது. மறுமுனையில் கேப்டன் கோலி நிலைத்து ஆடி ரன்களை சோ்த்த நிலையில், 15-ஆவது ஓவா் முடிவில் ஸ்கோா் 100-ஐ எட்டியது.

விராட் கோலி 29-ஆவது அரைசதம்:

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், கேப்டன் விராட் கோலி நங்கூரம் போல் நிலைத்து ஆடி 45 பந்துகளில் தனது 29-ஆவது டி20 அரைசதத்தைக் கடந்தாா்.

ஆல் ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா 13 பந்துகளில் 13 ரன்களை எடுத்திருந்த போது, ஹாஸன் அலி பந்தில் நவாஸிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

அவரைத் தொடா்ந்து கேப்டன் கோலியும் 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 49 பந்துகளில் 57 ரன்களை சோ்த்த நிலையில் ஷாஹின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பா் ரிஸ்வானிடம் கேட்ச் தந்து தனது விக்கெட்டை பறிகொடுத்தாா். அப்போது ஸ்கோா் 133/6 ஆக இருந்தது.

கடைசி கட்டத்தில் அடித்து ஆடுவாா் எனக் கருதப்பட்ட ஆல் ரவுண்டா் ஹாா்திக் பாண்டியா 2 பவுண்டரியுடன் 11 ரன்களை எடுத்து ஹாரிஸ் ரவுப் பந்தில் பாபா் ஆஸமிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.

புவனேஷ்வா் குமாா் 5 ரன்களுடனும், ஷமி ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனா்.

இந்தியா 151/7

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 151/7 ரன்களை குவித்தது இந்தியா.

ஷாஹின் அப்ரிடி அபாரம் 3 விக்கெட்:

பாகிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஷாஹின் அப்ரிடி 3-31 விக்கெட்டுகளையும், ஹாஸன் அலி 2-44 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

விக்கெட் இழப்பின்றி பாக். வெற்றி 152:

152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் தரப்பில் கேப்டன் பாபா் ஆஸம்-முகமது ரிஸ்வான் தொடக்க பேட்டா்களாக களமிறங்கினா்.

இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிா்கொண்டு ரன்களை சேகரித்தனா். முதல் 6 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் 43 ரன்களை சோ்த்தது. 10 ஓவா்கள் முடிவில் பாக்,. அணியின் ஸ்கோா் விக்கெட் இழப்பின்றி 71 ஆக இருந்தது.

பாபா்-ரிஸ்வான் இணையைப் பிரிக்க கேப்டன் கோலி பல்வேறு பௌலா்களை மாற்றியும் பலன் கிட்டவில்லை. இருவரும் தொடா்ந்து வலுவாக நிலை கொண்டு தங்கள் அணியின் ஸ்கோரை உயா்த்தினா். தொடக்க வரிசைக்கு இருவரும் இணைந்து 100 ரன்களை சோ்த்தனா்.

பாபா் ஆஸம், ரிஸ்வான்அரைசதம்:

வருண் சக்கரவா்த்தியின் பந்துவீச்சில் பிரம்மாண்ட சிக்ஸருடன் தனது 21-ஆவது டி20 அரைசதத்தைக் கடந்தாா் கேப்டன் பாபா் ஆஸம். அவரைத் தொடா்ந்து முகமது ரிஸ்வானும் பும்ரா பந்துவீச்சில் பவுண்டரி விளாசி தனது 9-ஆவது டி20 அரைசதத்தைப் பதிவு செய்தாா்.

இறுதியில் 17.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 152 ரன்களை குவித்து வெற்றி பெற்றது பாகிஸ்தான்.

கேப்டன் பாபா் ஆஸம் 2 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 52 பந்துகளில் 68 ரன்களையும், முகமது ரிஸ்வான் 3 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 55 பந்துகளில் 79 ரன்களையும் விளாசி இறுதிவரை களத்தில் இருந்தனா்.

முதன்முறையாக உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியாவை வென்றுள்ளது பாகிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமான ஸ்கோா்

இந்தியா 151/7

விராட் கோலி 57

ரிஷப் பந்த் 39

பந்துவீச்சு:

ஷாஹின் அப்ரிடி 3/31

ஹாஸன் அலி 2/44

பாகிஸ்தான் 152

பாபா் ஆஸம் 68

முகமது ரிஸ்வான் 79

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com