டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராகக் கஷ்டப்பட்டு 124 ரன்கள் எடுத்த வங்கதேசம்

முஷ்பிகுர் ரஹிம், நசும் அஹமது ஆகியோரின் தயவால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது...
விக்கெட் எடுத்ததைக் கொண்டாடு டைமல் மில்ஸ்
விக்கெட் எடுத்ததைக் கொண்டாடு டைமல் மில்ஸ்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.

அபுதாபியில் இங்கிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பைக்கான ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. பகலில் நடைபெறும் ஆட்டம் என்பதால் பனிப்பொழிவு பிரச்னை கிடையாது. இதன் காரணமாக இந்த முடிவை வங்கதேச அணி எடுத்துள்ளது. அந்த அணியில் ஷொரிபில் இஸ்லாம் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்கு இடமில்லை. முதல்முறையாக சர்வதேச டி20 ஆட்டத்தில் இங்கிலாந்தும் வங்கதேசமும் இன்று மோதுகின்றன. 

இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை நொறுக்கியது. வங்கதேச அணி, இலங்கையிடம் எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தது. 

ஆரம்பம் முதலே சிறப்பாகப் பந்துவீசி வங்கதேச பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தார்கள் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள். இதனால் பவர்பிளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்தது வங்கதேச அணி. அடுத்தடுத்த பந்துகளில் லிடன் தாஸ், முகது நயிம் ஆகியோரை வீழ்த்தினார் மொயீன் அலி. நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் 4 ரன்களில் வோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் வரை மேலும் விக்கெட்டுகளை இழக்காமல் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது வங்கதேசம்.

11-வது ஓவரில் முஷ்பிகுர் ரஹிம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு மஹ்முதுல்லா 19 ரன்களில் ஆட்டமிழந்ததால் வங்கதேச அணி மேலும் தடுமாறியது. 15 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்திருந்தது. முக்கிய பேட்டர்கள் முன்பே ஆட்டமிழந்ததால் கடைசிக்கட்டத்தில் ரன்கள் எடுக்கத் திணறியது. ஆச்சர்யமாக 19-வது ஓவரில் மட்டும் நசும் அஹமது இரண்டு சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி அடித்ததால் அந்த ஓவரில் சுளையாக 17 ரன்கள் கிடைத்தன. கடைசி ஓவரில் இரு விக்கெட்டுகள் விழுந்தன. 

முஷ்பிகுர் ரஹிம், நசும் அஹமது ஆகியோரின் தயவால் வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்துத் தரப்பில் டைமல் மில்ஸ் 3 விக்கெட்டுகளும் மொயீன் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com