டி20 உலகக் கோப்பையில் இரு தோல்விகள்: மீண்டு வருமா மேற்கிந்தியத் தீவுகள் அணி?

டி20 கிரிக்கெட்டில் உலகம் முழுக்கச் சாதித்து வரும் மே.இ. அணி கிரிக்கெட் வீரர்கள்...
மேற்கிந்தியத் தீவுகள் அணி
மேற்கிந்தியத் தீவுகள் அணி

டி20 உலகக் கோப்பைப் போட்டியை இருமுறை வென்ற ஒரே அணி மேற்கிந்தியத் தீவுகள். நடப்பு சாம்பியனாக இருந்தபோதும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இரு தோல்விகளுடன் இக்கட்டான நிலைமையில் உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்த மே.இ. தீவுகள் அணி, 2-வது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ரன்ரேட் காரணமாக வங்கதேசம் மே.இ. தீவுகளை விடவும் ஒரு படி மேலே இருக்கிறது.

கிறிஸ் கெயில், நிகோலஸ் பூரன், ஹெட்மையர், பொலார்ட், ரஸ்ஸல், பிராவோ என டி20 அணுகுண்டு வீரர்களை உள்ளடக்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, பேட்டிங்கில் சொதப்பி வருவது ஆச்சர்யத்தை உண்டாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக லெண்டில் சிம்மன்ஸ் 35 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து வலியை அதிகமாக்கியிருக்கிறார். சர்வதேச டி20 ஆட்டத்தில் 30 பந்துகளை எதிர்கொண்டு விளையாடிய வேறு எந்த மே.இ. தீவுகள் அணி வீரரும் இவரளவுக்கு நிதானமாக விளையாடியதில்லை. எவின் லூயிஸின் அதிரடி ஆட்டம் மட்டுமே ஆறுதலைத் தந்திருக்கிறது. 

ஷார்ஜாவில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேச அணியை மேற்கிந்தியத் தீவுகள் அணி எதிர்கொள்கிறது. இரு அணிகளும் இதுவரை விளையாடிய 2 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் இன்னொருமுறை தோல்வியடையும் அணி அரையிறுதிக் கனவை மூட்டைக்கட்டி வைத்துவிட வேண்டியது தான். சூப்பர் 12 சுற்றில் விளையாடுகிற 5 ஆட்டங்களில் 3-ல் தோற்றால் அரையிறுதி வாய்ப்பு எப்படிக் கிடைக்கும்? எனவே வங்கதேசத்துக்கு எதிராகக் கட்டாயமாக ஜெயிக்கவேண்டிய நிலையில் உள்ளது மேற்கிந்தியத் தீவுகள் அணி. 

டி20 கிரிக்கெட்டில் உலகம் முழுக்கச் சாதித்து வரும் மே.இ. அணி கிரிக்கெட் வீரர்கள் இப்போது தங்கள் நாட்டுக்காக சாகசங்களை நிகழ்த்தவேண்டியிருக்கிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் மீது ரசிகர்களுக்கு மேலும் ஆர்வம் உண்டாக மே.இ. தீவுகள் அணியின் வெற்றிகள் அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com