டி-20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது பாகிஸ்தான்
By DIN | Published On : 29th October 2021 11:21 PM | Last Updated : 29th October 2021 11:21 PM | அ+அ அ- |

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதின.
துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹசரத்துலாஹ் ஜாஜை, முகமது ஷஜாத் ஆகியோர் களமிறங்கினர்.
ஹசரத்துலாஹ் ஜாஜை ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து முகமது ஷஜாதும் 8 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். நடுவரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆஃப்கானிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் தடுமாறியது.
இந்த நிலையில் களம்கண்ட கேப்டன் முகமது நபியும், குல்பதின் நைப்பும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி சரிவிலிருந்து மீண்டது.
அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது.
முகமது நபி, குல்பதின் நைப் தலா 35 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாசீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
படிக்க | வங்கதேசத்தை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்
இதனைத் தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரர்களான முகமது ரிஸ்வான் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், பாபர் அஸாம் 47 பந்துகளில் 51 ரன்களை எடுத்து அரை சதம் கடந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஃபக்ஹர் 25 பந்துகளில் 30 ரன்களை எடுத்தார்.
பின்னர் அடுத்தடுத்து வந்த முகமது ஹாஃபீஸ் (10), மாலிக் (19), ஆஸிப் அலி (25) ஆகியோர் சொற்ப ரன்களையே எடுத்தனர்.
எனினும் 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி 148 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.