
ஆல்ரவுண்டர்களிடமிருந்து சிறப்பான பங்களிப்பைப் பெறுவதே இந்த உலகக் கோப்பைத் தொடரில் எங்களது முக்கிய நோக்கம் என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இன்று (ஜூன் 5) நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி அயர்லாந்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியில் உள்ள ஆல்ரவுண்டர்களிடமிருந்து சிறப்பான பங்களிப்பைப் பெறுவதே டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் அணி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்குமென ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணி சமபலத்துடன் இருக்க வேண்டுமென்றால், உங்களுக்கு அதிக அளவில் ஆல்ரவுண்டர்கள் அணியில் தேவைப்படுவார்கள். வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே இருக்கின்றனர். சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் இருக்கின்றனர். இந்த டி20 தொடர் முழுவதும் இவர்கள் 4 பேரையும் இந்திய அணி எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்பது மிகவும் முக்கியமானது.
ஆட்டத்தின் தன்மைக்கேற்ப இவர்களை அணி நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ளும். டி20 கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். டி20 போட்டிகள் மட்டுமல்லாது, அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர்களது பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அணியில் உள்ள மற்ற வீரர்களின் பங்களிப்பைக் காட்டிலும் அவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 4 ஆல்ரவுண்டர்களும் ஒன்றாக களமிறக்கப்படுவார்களா என்பது எனக்குத் தெரியாது. அப்படி ஒன்றாக களமிறக்கப்பட்டு விளையாட முடிந்தால், நன்றாக இருக்கும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.