
பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. பாகிஸ்தான் அணி அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததும் அந்த அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். அணிக்குள் வீரர்கள் பிரிவுகளாக உள்ளதாகவும் தகவல் வெளியானது. பாகிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டன், பாகிஸ்தான் அணியில் ஒற்றுமையே இல்லை என அண்மையில் விமர்சித்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் ரசிகர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் பாகிஸ்தான் அணி லீக் சுற்றில் வெளியேறிய பிறகு நடந்துள்ளது. ஹாரிஸ் ரௌஃப் அவரது மனைவியுடன் நடந்து செல்கிறார். அப்போது ரசிகர்கள் சிலர் கூட்டமாக நடந்து செல்கிறார்கள். உலகக் கோப்பையில் பாகிஸ்தானின் மோசமான செயல்பாடு குறித்து அவர்கள் விமர்சித்ததாக கூறப்படுகிறது.
அவர்களுக்குள் என்ன வாக்குவாதம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், ஹாரிஸ் ரௌஃப் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, அந்த ரசிகர்களை நோக்கி ஆவேசமாக ஓடி வருகிறார். அவரை அங்குள்ள ஒருவர் தடுக்க முயற்சித்தும் தொடர்ந்து ரௌஃப் முன்னேறிச் செல்கிறார்.
இது தொடர்பாக ஹாரிஸ் ரௌஃப் அவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: இந்த விஷயத்தை நான் சமூக வலைத்தளத்துக்கு கொண்டுவர வேண்டாம் என நினைத்தேன். ஆனால், விடியோ வெளிவந்த பிறகு இது குறித்து பேசாமல் இருக்க முடியவில்லை. பிரபலங்களாக இருப்பதால் நாங்கள் ரசிகர்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்க கடமைப்பட்டுள்ளோம். ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்கலாம் அல்லது விமர்சிக்கலாம். ஆனால், அவர்கள் எனது பெற்றோரைப் பற்றியோ அல்லது குடும்பத்தைப் பற்றியோ விமர்சித்தால், அதற்கேற்றவாறு நான் நடந்துகொள்வேன் எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.