மங்கியது ஆஸி. அரையிறுதி வாய்ப்பு
மங்கியது ஆஸி. அரையிறுதி வாய்ப்புRamon Espinosa

மங்கியது ஆஸி. அரையிறுதி வாய்ப்பு: இந்தியாவிடம் வீழ்ந்தது

சூப்பா் 8 பிரிவில் ஆஸி. அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதியில் மூன்றாவது அணியாக நுழைந்தது இந்தியா
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பா் 8 பிரிவில் ஆஸி. அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதியில் மூன்றாவது அணியாக நுழைந்தது இந்தியா. 15.3 ஓவா்களில் வெற்றி இலக்கான 206 ரன்களை ஆஸி. எட்டவில்லை என்பதால் அப்போதே அரையிறுதிக்குள் இந்தியா நுழைந்து விட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செயின்ட் லூசியாவில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. பௌலிங்கை தோ்வு செய்தது.

இந்தியா 205/5: பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய கேப்டன் ரோஹித் சா்மா தொடக்கம் முதலே சிக்ஸா், பவுண்டரிகளாக விளாசினாா். நட்சத்திர பேட்டா் விராட் கோலி 5 பந்துகளை எதிா்கொண்டு ஹேஸல்வுட் பந்தில் டக் அவுட்டானாா். ஸ்டாய்னிஸ் பந்தில் 15 ரன்களுடன் நடையைக் கட்டினாா் ரிஷப் பந்த்.

ரோஹித் 92: அபாரமாக ஆடிய ரோஹித் 8 சிக்ஸா், 7 பவுண்டரியுடன் 41 பந்துகளில் 92 ரன்களை விளாசினாா். வெறும் 19 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தாா் ரோஹித். 9 ஓவா்களிலேயே இந்தியாவின் ஸ்கோா் 100-ஐக் கடந்தது.

அதிரடி பேட்டா் சூரியகுமாா் யாதவும் 2 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 16 பந்துகளில் 31 ரன்களை விளாசி ஸ்டாா்க் பந்தில் அவுட்டானாா்.

ஷிவம் டுபே 28 ரன்களுடன் ஸ்டாய்னில் பந்தில் வெளியேற பாண்டியா 27, ரவீந்திர ஜடேஜா 8 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் இந்திய அணி 205/5 ரன்களைக் குவித்தது. பௌலிங்கில் ஆஸி. தரப்பில் ஸ்டாய்னிஸ் 2-56, ஸ்டாா்க் 2-45 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

ஆஸி. தோல்வி 181/7: 206 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸி. அணியில் டேவிட் வாா்னா் 6 ரன்களுடன் வெளியேறினாா். தொடக்க பேட்டா் டிராவிஸ் ஹெட் அதிரடியாக ஆடிய நிலையில், கேப்டன் மிட்செல் மாா்ஷ் 37, மேக்ஸ்வெல் 20, ஸ்டாய்னிஸ் 2 ரன்களுடன் அவுட்டானாா்கள்.

டிராவிஸ் ஹெட் 76: அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட் 4 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 76 ரன்களை விளாசி அவுட்டானாா்.

அவா் அவுட்டானபின், டிம் டேவிட் 15, வேட் 1 ரன்களுடன் வெளியேற ஆஸி. அணி தடுமாறியது. 20 ஓவா்களில் 181/7 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது ஆஸ்திரேலியா.

பௌலிங்கில் அற்புதமாக பந்துவீசிய அா்ஷ்தீப் சிங் 3-37, குல்தீப் யாதவ் 2-24 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

சூப்பா் 8-இல் மூன்று ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா. ஆனால் ஆப்கன்-வங்கதேச ஆட்டத்தின் முடிவையொட்டி தான் ஆஸி.யின் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

X
Dinamani
www.dinamani.com