சென்னை, மே 30: தமிழகத்தில் 22 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
மேலும், உடல் நலிவுற்று சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுக்கு ரூ. 3 லட்சம் பரிவுத் தொகை வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
2009 - 2010-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 28 தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களின் மரபுரிமையருக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், இராய சொக்கலிங்கனார், முனைவர் ச. அகத்தியலிங்கம், பாவலர் நாரா. நாச்சியப்பன், புலியூர்க்கேசிகன், சின்ன அண்ணாமலை, வடுவூர் துரைசாமி அய்யங்கார், பேராசிரியர் மு. இராகவையங்கார் ஆகிய 9 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகள் அரசுமைடையாக்கப்பட்டு, அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பம்மல் சம்பந்தனார், டாக்டர் சிதம்பரநாதன் செட்டியார், மு.சு. பூரணலிங்கம்பிள்ளை, தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், வை.மு. கோதைநாயகி, பூவை எஸ். ஆறுமுகம், என்.வி. கலைமணி, கவிஞர் முருகுசுந்தரம், புலவர் த. கோவேந்தன், திருக்குறள் மணி அ.க. நவநீதகிருட்டிணன் ஆகிய 12 தமிழ்ச் சான்றோர்களின் படைப்புகளை அரசுடைமையாக்கி அவர்களின் மரபுரிமையருக்கு தலா ரூ. 3 லட்சம் பரிவுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.
ஐந்து பேர் ஒப்புதல் இல்லை... 28 பேரில், எஞ்சிய 7 பேரில் கவியரசு கண்ணதாசன், டாக்டர் மு. வரதராசனார், எழுத்தாளர் சாண்டில்யன், எழுத்தாளர் சுந்தர ராமசாமி, திருமதி லட்சுமி ஆகிய 5 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதற்கு அவர்களுடைய மரபுரிமையர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.
ஜெ.ஆர். ரெங்கராஜூ, ஜமதக்னி ஆகிய இருவரின் மரபுரிமையர்களிடம் சான்று ஆவணம் பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று முதல்வர் கருணாநிதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
"தினமணி' செய்தியால்...
சாகித்ய அகாதெமி மற்றும் தமிழக அரசின் விருதுகளைப் பெற்றுள்ள தமிழ் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் உடல் நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது பற்றி "தினமணி' இணைப்பான கொண்டாட்டம் பகுதியில் செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து, ராஜம் கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்று, தனி நேர்வாகக் கருதி அவரது படைப்புகளை அரசுடைமையாக்கி மரபுரிமையர் ஒருவரும் இல்லாத காரணத்தால் அவருக்கு ரூ. 3 லட்சம் பரிவுத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவால், 22 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மொத்தம் ரூ. 84 லட்சம் பரிவுத் தொகையாக வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.