ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

டெல்டாவில் பருவம் தவறும் சம்பா பயிர்கள்

 திருவாரூர், அக். 5: காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய மழை மற்றும் நீர் பங்கீட்டில் சரியான திட்டமிடல் இல்லாததால் சம்பா, தாளடி நெல் பயிர்கள் சாகுபடி பருவம் தவறிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.   தஞ்சாவூர்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:07 pm

 திருவாரூர், அக். 5: காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய மழை மற்றும் நீர் பங்கீட்டில் சரியான திட்டமிடல் இல்லாததால் சம்பா, தாளடி நெல் பயிர்கள் சாகுபடி பருவம் தவறிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

  தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் பயிர்தான் பிரதானம். இங்கு குறுவை ஏறத்தாழ 1.12 லட்சம் ஹெக்டேரும், சம்பா மற்றும் தாளடி சாகுபடி ஏறத்தாழ 4.34 லட்சம் ஹெக்டேரும் வழக்கமான சாகுபடி பரப்பாகும்.

  நிகழாண்டில் மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், குறுவை சாகுபடி 50 சதப் பரப்பளவிலேயே நடைபெற்றது.

  அணைக்கு நீர்வரத்து அதிகமானதால், ஜூலை 28-ம் தேதி அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் டெல்டா மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி பரப்பில் ஏறத்தாழ 38 சத அளவுக்கே நடவு, நேரடி விதைப்புப் பணிகள் முடிந்துள்ளன.

  வழக்கமாக சம்பா மற்றும் தாளடிப் பயிர்கள் ஆகஸ்ட் மாதம் நாற்றுவிடத் தொடங்கி, செப்டம்பர் மாத இறுதிக்குள்ளாக நடவு முடிந்திருக்க வேண்டும்.

  ஆனால், தற்போது திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான பரப்பான 1.48 லட்சம் ஹெக்டேரில் இதுவரை 86,000 ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 1.42 லட்சம் ஹெக்டேரில் இதுவரை 46,800 ஹெக்டேரிலும் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.

  தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகக் குறைந்த அளவாக வழக்கமான சாகுபடிப் பரப்பான 1.44 லட்சம் ஹெக்டேரில் இதுவரை 17,000 ஹெக்டேரில் மட்டுமே நடவுப் பணிகள் முடிந்துள்ளன. திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஏறத்தாழ 15,000 ஹெக்டேரில் நேரடி விதைப்பு நடைபெற்றுள்ளது.

  மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமான அளவு இருந்தபோதும், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு முறை வைத்தே தண்ணீர் திறக்கப்பட்டது. போதிய மழை இல்லாத காரணத்தால் வறண்டு கிடந்த ஆறுகள், வாய்க்கால்களில் நீர் வந்ததே தவிர, பல இடங்களில் அது வயல்களைச் சென்றடையவில்லை.

  இதனால், முறைவைக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தொடர்ந்து விவசாயிகள் எழுப்பி வந்த கோரிக்கைகளையடுத்து, தற்போது ஒருவாரத்துக்கு காவிரியில் கூடுதலாகவும், மறு வாரத்தில் வெண்ணாற்றில் கூடுதலாகவும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

  கடந்த இரு ஆண்டுகளாக டெல்டா பகுதியில் ஆறுகளை முழுமையாகத் தூர்வாராததால், விடப்படும் தண்ணீரும் வயல்களுக்கு சென்று சேருவதில்லை.

  விதைநெல், உரம் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்கினாலும், பயிர்க் கடனைப் பொருத்தவரையில் மிகக் குறைந்த அளவே வழங்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

  மேலும், ஏற்கெனவே வேலை தேடி பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் இளைஞர்களும், இளம் பெண்களும் இடம்பெயர்ந்துவிட்ட நிலையில், தற்போது அனைத்துக் கிராமங்களிலும் "நடைபெறும்' தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் காரணமாக விவசாய வேலை செய்ய கூலித் தொழிலாளர்கள் வருவதில்லை என்பதும் விவசாயிகளை விரக்தியடையச் செய்துள்ளது.

  தற்போதுள்ள நிலவரப்படி, இந்த மாவட்டங்களில் சம்பா, தாளடி சாகுபடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டாது என்பதுடன், நடவுப் பணிகளே அக்டோபர் மாத இறுதி வரை நடைபெறும் வாய்ப்பும் உள்ளது.

  நாட்டில் ஒருபுறம் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதியில் உணவு உற்பத்திக்கு நல்ல வாய்ப்புள்ள காலக்கட்டத்தில் அதை முழுமையாகத் திட்டமிட்டு, நாட்டுக்கே உணவளிக்கும் கடமையை அரசுகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே விவசாயிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.