உரங்கள், பூச்சிக் கொல்லிகளில் போலிகள்
சென்னை, ஏப்ரல் 6: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், கொசு ஒழிப்பான்கள் என அனைத்திலும் போலிகள் உலவுகின்றன. இவற்றைக் களைய வேண்டிய வேளாண் துறையின் ராசாயனப் பிரிவு உரிய


சென்னை, ஏப்ரல் 6: தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள், கொசு ஒழிப்பான்கள் என அனைத்திலும் போலிகள் உலவுகின்றன.
இவற்றைக் களைய வேண்டிய வேளாண் துறையின் ராசாயனப் பிரிவு உரிய அதிகாரிகள் இன்றி முடங்கி உள்ளது.
இந்தியாவில் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகள், களைக் கொல்லிகள் ஆகியவற்றின் விற்பனை ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும். அதில், போலி மற்றும் காலாவதியான பூச்சிக் கொல்லி மருந்துகளின் அளவு ரூ.70 ஆயிரம் கோடிக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலி பூச்சிக் கொல்லி மருந்துகள் மற்றும் மோசமான கலப்பு உரங்கள் அதிகளவு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
களைக் கொல்லிகள் முதல்...:பயிர்கள் செழித்து வளர்வதற்கு களைக் கொல்லிகள் முக்கியமானது. களைகளை கட்டுப்படுத்த 'பெர்சூயேட்' மற்றும் 'தர்கா சூப்பர்' போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.
இந்தக் களைக் கொல்லிகளை பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்து வந்தன.
ஆனால், இப்போது இந்த வகையான களைக் கொல்லிகளைத் தயாரிப்பது தமிழகத்தில் குடிசைத் தொழிலாக மாறிவிட்டது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் களைக் கொல்லிகளைப் போலவே போலிகளையும் தயாரிக்கின்றனர்.
விவசாயத்தில் களைக் கொல்லிகள் 10 முதல் 15 நாள்கள் வரை மட்டுமே பயன்படுத்தப்படும். போலி களைக் கொல்லிகளின் விற்பனையும் இதே காலகட்டத்துக்குள் விற்றுத் தீர்ந்து விடும். இதனால், விவசாயிகளை ஏமாற்றும் மோசடிப் பேர் வழிகள் உடனடியாக சிக்குவதில்லை என வேளாண் துறை அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
போலி உரங்கள் தயாரிப்பு... இந்த நிலையில் இடுபொருள்களான பல்வேறு வகை உரங்களின் தயாரிப்பிலும் மோசடி நடைபெறுகிறது.
டி.ஏ.பி. உரங்களுக்கு தமிழகத்தில் எப்போதும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை உர விற்பனையாளர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதே போல யூரியா, அதனுடன் சிறிதளவு பொட்டாஷ் மற்றும் மணலைக் கலந்து, கலப்பு உரமாக விற்று விடுகின்றனர்.
கூட்டுறவு சங்கங்களில் எளிதில் கடனுதவி கிடைக்காது என்பதால், பெரும்பாலான விவசாயிகள் தனியாரின் உர விற்பனை நிலையங்களை நாடுகின்றனர். அங்கு, கலப்பு உரம் என்ற பெயரில் போலி உரங்கள் வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
உரங்களைத் தொடர்ந்து பூச்சிக் கொல்லி மருந்துகளில் மிகப் பெரிய மோசடி நடைபெறுதாகக் கூறப்படுகிறது. 'சின்தடிக் பெரிதாரிடில்' போன்ற முக்கிய பூச்சிக் கொல்லி மருந்துகளும் வீடுகளிலேயே தயார் செய்யப்பட்டு எந்தப் பரிசோதனையும் செய்யாமல் கடைகளில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
போலி லேபிள்கள் ஒட்டப்பட்டு, குறைந்த சக்தி கொண்ட பூச்சிக் கொல்லிகள் மலிவு விலைக்கு விற்கப்படுகின்றன. விவசாயிகளும் இதை நம்பி வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு சில பூச்சிக் கொல்லி, உரங்கள் என்றில்லாமல் பெரும்பாலானவற்றில் போலிகள் உலாவுவதாக வேளாண் துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கொசு மருந்துகளில்...கொசுக்களை விரட்ட இப்போது 'லிக்குடேட்டர்கள்' உபயோகப்படுத்தப்படுகின்றன. அதில், 'பாராஅலித்ரீன் 1.6' என்ற வேதிப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேதிப் பொருளின் அளவை கூட்டியும், குறைத்தும் 'லிக்குடேட்டர்கள்' போலியாகத் தயாரிக்கப்பட்டு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் கடைகளில் விற்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.
வேளாண் துறை என்ன செய்கிறது?...'காய்கறி, பழங்கள் உள்ளிட்ட செடி வகைகளுக்கு எத்தனை முறை மருந்து தெளித்தாலும் பயன் இல்லை' என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இந்தப் பிரச்னையில் தமிழக வேளாண் துறை இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு, வேளாண் துறையில் 2008}ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 'மறு கட்டமைப்பு' முறையே காரணம் என்று வேளாண் துறை அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
''வேளாண் துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் ராசாயனப் பிரிவு செயல்பட்டு வந்தது. அதில், தரக் கட்டுப்பாட்டு, மண் வள ஆய்வு, பூச்சிக் கொல்லி பரிசோதனை ஆய்வு ஆகிய பிரிவுகள் இணை இயக்குநர்களின் தலைமையில் இயங்கி வந்தன.
மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில் மத்திய கட்டுப்பாட்டு ஆய்வகமும் செயல்பட்டு வந்தது. தமிழகத்தில் கடைகளில் விற்கப்படும் பூச்சிக் கொல்லி மருந்துகள், உரங்கள் ஆகியவற்றைப் பெற்று சோதனை செய்யும் பணியை ரசாயனப் பிரிவு மேற்கொண்டது. இப்போது, இந்தப் பிரிவு மாவட்ட அளவிலான இணை இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
''ரசாயனப் பிரிவில் வேளாண் அலுவலர் உள்ளிட்ட 82 பேர் பணியாற்றி வந்தனர். இப்போது, வட்டார அளவில் ஒரு உதவி இயக்குநர் மற்றும் வேளாண் அலுவலர் என 2 பேர் பணியாற்றி வருகின்றனர். மாதத்துக்கு ஒரே ஒரு முறை மட்டும் சோதனையில் ஈடுபடுகின்றனர். போலிகளைப் பிடித்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க நேரிடும் என்பதால் பிடிபடும் அனைத்தையும் விட்டு விடுகின்றனர். ஏற்கெனவே, ரசாயனப் பிரிவில் பணியாற்றி வந்த 82 பேர் தோட்டக் கலைத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நெல் அதிகம் விளையும் டெல்டா மாவட்டங்களில் தோட்டக் கலையை வளர்க்க அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆனால், விவசாயிகளுக்கு மிகவும் பயன்தரக் கூடிய ரசாயனப் பிரிவு செயலிழந்து விட்டது'' என வேளாண் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதிப்பு என்ன?
போலியான வேதிப் பொருள்களைக் கொண்டு கொசு ஒழிப்பான்களைத் தயாரிப்பதால் குழந்தைகளின் கண் பார்வையில் குறைபாடு ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொசு ஒழிப்பான்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்துகின்றனர். மேலும், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களும் ஏற்பட வழிவகுக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
போலியான பூச்சிக் கொல்லி மற்றும் களைக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் செடிகளின் வளர்ச்சி குன்றும். ஒரு முறைக்குப் பலமுறை போலியான வேதிப் பொருள்களை செடிகளுக்குத் தெளிப்பதால் அவற்றில் இருந்து கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் நச்சுத் தன்மை கொண்டதாக மாறுகிறது என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...