சென்னை, ஏப். 19: பள்ளிக்கூட மாணவர்களின் தேர்வு காலத்தில் ஒலி பெருக்கிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
10}ம் வகுப்பு தேர்வு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் பள்ளி மாணவர்களின் வருங்கால கல்வியை நிர்ணயித்து அவர்களின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துபவை.
இந்தத் தேர்வுகளை எழுதுவதற்காக ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் "பகீரத' முயற்சி செய்து படிக்கின்றனர்.
பெற்றோர்களும் தங்களது குழந்தைகளை, ஒளிமயமான எதிர்காலத்துக்கு உத்தரவாதமாக, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகளில் சேர்க்க ஆசைக் கனவுகளுடன் அரும்பாடு படுகின்றனர்.
ஆனால், தொழிற்சாலைகள் பெருக்கம், வாகனங்கள் அதிகரிப்பு, திருமணம், பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் ஒலிபெருக்கி பயன்பாடு போன்ற பல்வேறு காரணங்களால், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இரைச்சல் அளவு அதிகரித்து வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் தொடர்கிறது.
சென்னை போன்ற நகரங்களில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள இரைச்சலின் அளவு 85 டெசிபலுக்கு மேல் உள்ளது.
டேப் ரிக்கார்டரில் 5}வது நிலையில் ஒலி அளவு இருந்தால் அது 100 டெசிபலை எட்டும். தொடர்ந்து 15 நிமிடம் இதே அளவு ஒலியைக் கேட்டால் நமது செவித்திறன் பாதிக்கப்படும்.
இப்போது பெரும்பாலான பகுதிகளில் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு மாற்றாக 1,000 முதல் 4,000 வாட்ஸ் திறனுள்ள பல ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிப் பெட்டிகள் (சவுண்ட் பாக்ஸ்) பயன்படுத்தப்படுகின்றன.
செவித் திறன் பாதிக்கும் அபாயம்: கோவில் திருவிழா முதல் அரசியல் கட்சிகளின் பிரசாரப் பொதுக்கூட்டங்கள் வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த ஒலி பெருக்கிகளால் இரைச்சல் அதிகரித்து (ஒலி மாசு) நோயாளிகள், கர்ப்பிணிகள் மட்டுமன்றி மாணவர்களின் செவித்திறனும் பாதிக்கப்படுகிறது.
ஒலி பெருக்கிகளை அமைக்கும் தொழிலில் பல்வேறு சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் ஒலி}ஒளி அமைப்பை நிறுவ உள்ளூர் போலீஸôரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகள் பெரும்பாலான நேரங்களில் "காற்றில் பறக்க' விடப்படுகின்றன.
வாகனங்களால் ஒலி மாசு: ஆம்னி பஸ்கள், லாரிகளில் மிகவும் சக்தி வாய்ந்த ஒலிப்பான்கள் (ஹாரன்) பொருத்தப்படுகின்றன. இந்த ஒலிப்பான்கள் 10-க்கும் மேற்பட்ட வகைகளில் கிடைக்கின்றன.
மோட்டார் சைக்கிள்களில் எலக்ட்ரானிக் முறையில் "கன்வெர்ட்டர் ஸ்பீக்கர் ஹாரன்' பொருத்தப்படுகின்றன.
திடீரென "கழுதைப் புலி' போல உறுமும் வகையில் விநோத ஒலிகளை எழுப்பி பாதசாரிகளை அதிர்ச்சி அடையச் செய்யும் "டபுள் ஹாரன்' ஒலிப்பான்களை தங்களது மோட்டார் சைக்கிள்களில் பொருத்துவதையே இளைஞர்கள் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை 1.20 கோடியைத் தாண்டியுள்ள நிலையில் ஒலி மாசு, வரையறுக்கப்பட்ட அளவை விட பல மடங்கு அதிகரித்து வருகிறது.
மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களின் இனப் பெருக்க காலத்தில் ஆண்டுதோறும் 45 நாள்களுக்கு விசைப் படகுகளைப் பயன்படுத்தி கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
முட்டையிட சென்னை மெரீனா உள்ளிட்ட கிழக்குக் கடற்கரை பகுதிகளுக்கு கடல் ஆமைகள் இரவில் வருவதால், அவற்றுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்ற நோக்கில் அந்த பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை உள்ளது.
இதேபோல பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு காலத்தில், அவர்களின் கல்வி எதிர்காலம், செவித்திறனை கருத்தில் கொண்டு ஒலிபெருக்கிகளுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.