மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

காணக் கிடைக்காத திப்பு-ஹைதர் மஹால்கள்; போலீஸôருக்கு மனமில்லை: மக்கள் பார்க்க வாய்ப்பில்லை

வேலூர், ஏப்.26: வேலூர் கோட்டைக்குள் இருக்கும் திப்பு-ஹைதர் மஹால்கள் போலீஸôரின் பிடியிலேயே நீண்டகாலமாக இருந்து வருகின்றன.  இவற்றைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:45 am

வேலூர், ஏப்.26: வேலூர் கோட்டைக்குள் இருக்கும் திப்பு-ஹைதர் மஹால்கள் போலீஸôரின் பிடியிலேயே நீண்டகாலமாக இருந்து வருகின்றன.

 இவற்றைப் பொதுமக்களின் பார்வைக்குத் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

  வேலூர் நகரில் 136 ஏக்கர் பரப்பளவு, 2,533 அடி நீளம், 1,516 அடி அகலம் கொண்டதாக, 3 கி.மீ. சுற்றளவில், அகழியோடு அமைந்துள்ளது வேலூர் கோட்டை. கி.பி. 1322-1333-ம் ஆண்டுகளில் ஜலகண்டேசுவரர் கோயில் கட்டத் தொடங்கி, கி.பி. 1526-1595-ம் ஆண்டு வரை வேலூரை ஆண்ட சின்னபொம்மு நாயக்கரால் கோட்டை, கோட்டை மதிற்சுவர், ஜலகண்டேசுவரர் ஆலய கோபுரம், கலையழகு மிக்க கல்யாண மண்டபம் ஆகியவை கட்டப்பட்டன.

 கி.பி. 1760-ல் ஆங்கிலேயர் வசமான இக்கோட்டை, கி.பி. 1780-1784 வரை திப்புசுல்தான் வசம் போனது. பிறகு மீண்டும் ஆங்கிலேயர்கள் இக்கோட்டையை மீட்டனர்.

 கி.பி. 1799 மே மாதம் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் திப்புசுல்தான் கொல்லப்பட்டப் பிறகு, வேலூர் கோட்டைக்குள் அவரது 12 மகன்கள் அடைக்கப்பட்ட இடம் பாதுஷா மஹால் எனவும், 8 மகள்களில் 6 மகள்கள் அடைக்கப்பட்ட இடம் பேகம் மஹால் எனவும் அழைக்கப்படுகின்றன.

 திப்புசுல்தானின் நேரடி உறவினர்கள் அடைக்கப்பட்ட இடம் திப்பு மஹால் என அழைக்கப்படுகிறது. இதில் தரைதளத்தில் 60 அறைகள், முதல்தளத்தில் 60 அறைகள் உள்ளன.

 திப்புசுல்தானின் தந்தை ஹைதர்அலி வழிவந்த உறவினர்கள் அடைக்கப்பட்ட இடம் ஹைதர் மஹால் என அழைக்கப்படுகிறது. இதன் தரைதளத்தில் 90 அறைகளும், முதல்தளத்தில் 90 அறைகளும் உள்ளன. திப்புவின் உறவினர்கள் என மட்டும் மொத்தம் 1,378 பேரை இவ்வாறு ஆங்கிலேயர்கள் சிறைவைத்திருந்தனர். இந்த இரு மஹால்களிலும் அறைகள் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்டிருக்கின்றன.

 அதேபோல, இலங்கையில் கண்டி நகரை ஆண்ட ஸ்ரீவிக்ரமராஜசிங்க மன்னனை கி.பி. 1832-ல் கைது செய்து, வேலூர் கோட்டையில் வைத்திருந்த இடம் கண்டி மஹால் என அழைக்கப்படுகிறது.

 இந்த கோட்டை 1921-ம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டு, தற்போது இந்திய தொல்லியல் துறை வசம் உள்ளது.

 கி.பி. 1896 முதல் இந்த திப்பு-ஹைதர் மஹால்கள் போலீஸôர் வசம் இருக்கின்றன. அப்போதைய சென்னை மாகாணத்தில் எங்கு போலீஸôர் நியமிக்கப்பட்டாலும், அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தளமாக வேலூர் கோட்டை இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகும் இது பயிற்சிப் பள்ளியாகவே நீடிக்கிறது.

 பல நூற்றாண்டு வரலாறு கொண்ட மஹால்கள் பொதுமக்களின் பார்வை படாத இடமாகவே நீண்ட நெடுங்காலம் இருந்தன. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, திப்பு மஹால் மட்டும் போலீஸôரால் புதுப்பிக்கப்பட்டு, சிப்பாய்ப் புரட்சியின் 200-ம் ஆண்டு விழாவையொட்டி, கடந்த 2006 ஜூலை 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்குத் திறந்து விடப்பட்டது.

 அப்போதும் ஹைதர் மஹால் புதுப்பிக்கப்படவும் இல்லை; பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படவும் இல்லை.   திப்பு மஹாலில் பயிற்சி போலீஸôர் தங்கியுள்ளனர். ஹைதர் மஹால் சிதிலமடைந்து அழியும் நிலையில் உள்ளது.

 வேலூர் கோட்டைக்கு தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். திப்பு வாரிசுகள் இருந்த பாதுஷா-பேகம் மஹால்கள் தொல்லியல்துறை அருங்காட்சியமாக இருக்கின்றன.

 ஆனால், திப்பு-ஹைதர் மஹால்களை சுற்றுலாப் பயணிகள் எவரும் இதுவரை காண முடியவில்லை. உள்ளே சுற்றுலா பயணிகள் வர போலீஸôர் அனுமதிப்பதில்லை. இடத்தை காலி செய்யவும் போலீஸôர் மறுக்கின்றனர். இந்த கோட்டையிலிருந்து வெளியேறுவதை கெüரவப் பிரச்னையாகவே போலீஸôர் கருதுவதாகத் தெரிகிறது.   

  அதனால், துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு மட்டும் போலீஸôர் கணியம்பாடி அருகேயுள்ள காவல்துறைக்குச் சொந்தமான இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

 திப்பு-ஹைதர் மஹால்களைப் புதுப்பிக்க போலீஸôர் ரூ.1 கோடி வரை நிதி கேட்டபோது, காவல்துறை உயரதிகாரிகள் தொகையை ஒதுக்கீடு செய்ய மறுத்துள்ளனர். அந்த நிதியில் காவல்துறைக்கு எனத் தனியே சொந்த கட்டமைப்பு வசதிகளைச் செய்ய முடியும் என்கிறபோது, தொல்லியல்துறை கட்டடத்துக்கு ஏன் நிதியைச் செலவிட்டு வீணடிக்க வேண்டும்? என்றும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  புனித ஜார்ஜ் கோட்டையை தொல்லியல்துறை வசம் ஒப்படைத்துவிட்டு, தலைமைச் செயலகத்தை இடம்மாற்ற அரசு நடவடிக்கை எடுத்தது. அதேபோல, வேலூர் கோட்டைக்கு வெளியே சொந்த இடத்தில் போலீஸ் பயிற்சி பள்ளியை இடம்மாற்றிக் கொண்டு, சுற்றுலாப் பயணிகள் பார்வையிட இந்த திப்பு- ஹைதர் மஹால்களைத் திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.