மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தண்ணீரை விற்கவா இலவச மின்சாரம்?

வேலூர், ஏப். 28: விவசாய கிணறுகளுக்கு அரசு வழங்கிய இலவச மின்சாரத்தின் உதவியோடு, தண்ணீர் லாரிகளுக்கு நீர் விற்பனை செய்யும் அவலம் அரங்கேறுகிறது.  நகர்ப் பகுதிகளையொட்டி உள்ளவர்கள் செய்யும் இச் செயலால், நி

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:48 am

வேலூர், ஏப். 28: விவசாய கிணறுகளுக்கு அரசு வழங்கிய இலவச மின்சாரத்தின் உதவியோடு, தண்ணீர் லாரிகளுக்கு நீர் விற்பனை செய்யும் அவலம் அரங்கேறுகிறது.

 நகர்ப் பகுதிகளையொட்டி உள்ளவர்கள் செய்யும் இச் செயலால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது.

 கோடை காலத்தில் நகர்ப் பகுதிகளில் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகளால், பொதுமக்களின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. பொதுமக்கள் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி வருகின்றனர்.

 இதனால், தற்போது அடிக்கடி தண்ணீர் கொண்டு செல்லும் டிராக்டர்கள், லாரிகளை அதிகம் காணக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவை, ஆறு, ஏரிகளில் இருந்து கொண்டுவரப்படும் தண்ணீர் கிடையாது. இவை அனைத்தும், ஏதோ ஒரு கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் இறைக்கப்பட்டு, லாரிகளிலும், டிராக்டர்களிலும் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

 இதில் அதிர்ச்சி அளிக்கக்கூடிய விஷயம், இவை பெரும்பாலும் விவசாயக் கிணற்றிலிருந்து கொண்டுவரப்படுகின்றன என்பதே. விவசாயிகள் பாசனத்துக்குத் தண்ணீர் தேவை என்கிறபோது, கிணறு வெட்ட மானியமும் கொடுத்து, சலுகை விலையில் மோட்டாரும் வழங்கி, அதை இயக்க விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் அளித்து வருகிறது அரசு. இதைக் கொண்டு விவசாயிகள் தங்களது விளைபொருள் உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே அரசு இதுபோன்ற வசதிகளைச் செய்து தருகிறது.

 ஆனால், விவசாயிகள் என்ற பெயரில் கிணறுகள் வெட்ட மானியமும், இலவச மின்சாரமும் பெற்ற பலர், தங்களது கிணற்று நீரை லாரிகளுக்கும், டிராக்டர்களுக்கும் விற்பனை செய்து வருகின்றனர். மேலும் பலர் தங்களது கிணற்றை தனியாருக்கு ஓராண்டுக்கு அல்லது சில மாதங்களுக்கு என குத்தகைக்கு விடுகின்றனர்.

 வேலூரில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை, தண்ணீர்த் தேவைக்காக, காகிதப்பட்டறை பகுதியில் ஒரு விவசாய கிணற்றை மாதம் ரூ.1 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. கொடுத்த தொகைக்கு மேலாகவே, அக் கிணற்றிலிருந்து ஏராளமான லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஒரே கிணற்றிலிருந்து இவ்வாறு முறைகேடாகத் தண்ணீர் எடுக்கப்படுவதால், அருகேயுள்ள மற்ற கிணறுகளிலும், ஆழ்குழாய்க் கிணறுகளிலும் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 இதேபோல, நகரில் மக்கள் வசிப்பிடம் அதிகம் கொண்டிருக்கும் சலவன்பேட்டை பகுதியில், மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு சில ஏக்கர் விளை நிலங்களுக்கு 3-க்கும் மேற்பட்ட விவசாயக் கிணறுகள் உள்ளன. இவை அனைத்திலும் இலவச மின்சாரத்தின் உதவியோடு, தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது.

 சிறிய டிராக்டரில் கொண்டுவரப்படும் தண்ணீர் ரூ.250 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதுவும், தண்ணீர் தேவைப்படும் இடங்களின் தொலைவைப் பொருத்து மாறுபடுகிறது. சாதாரணமாக ஒரு கிணற்றிலிருந்து மட்டும் ஒரு நாளைக்கு 30-க்கும் மேற்பட்ட முறை டிராக்டர்களில், லாரிகளில் தண்ணீர் ஏற்றி, அனுப்பப்படுகிறது.

 கோடைகாலத்தில் லாபம் அதிகம் உள்ள தொழிலாக, இது மாறியிருக்கிறது. சொந்த மின்சாரத்தில் இவ்வாறு தண்ணீர் விற்பனை செய்வதாக இருந்தால், லாபம் குறைவாகவே கிடைக்கும் என்பதால், இலவச மின்சாரம் இருக்கும் விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் விற்பனைக்கு எடுக்கப்படுகிறது என தண்ணீர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

 விவசாயிகள் என்ற பெயரில் பெறப்படும் இலவச மின்சாரம் இதுபோன்று முறைகேடான செயல்களுக்கு பயன்படுகிறது. அரசு இதைக் கண்காணிக்குமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.