ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருவாரூர் ஆழித்தேரோட்டம் நிகழாண்டில் நடத்தப்படுமா?

திருவாரூர், ஏப். 28: திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு ஆழித் தேரோட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாரூர் அருள்மிகு த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:48 am

திருவாரூர், ஏப். 28: திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு ஆழித் தேரோட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே எழுந்துள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க திருவாரூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆழித் தேரோட்டம் பிரசித்தி பெற்றது. தென்னகத்திலேயே  மிகப் பெரியது என்பதால், இத் தேர் ஆழித் தேர் என அழைக்கப்படுகிறது. சைவ சமயக் குரவர்களில் ஒருவரான அப்பரே முன்னின்று ஆழித் தேர் திருவிழாவை நடத்தியதாக ஐதீகம்.

ஆண்டுதோறும் இக் கோயிலில் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாகவும், நிறைவு விழாவாகவும் ஆழித் தேரோட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று தேரோட்டம் நடைபெற வேண்டும் என்பது ஜதீகம். ஆனால், கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களால் இந்த நடைமுறை மாற்றப்பட்டு விட்டது.

ஆயில்ய நட்சத்திரத்தில்தான் ஆழித் தேரோட்டத்தை நடத்த வேண்டுமென இந்து அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன.

நிகழாண்டிலும் இதன்படி தேரோட்டம் நடைபெறவில்லை. இதற்கான காரணமே வேறு. தமிழக சுற்றுலாத் துறை மூலம் ஏறத்தாழ ரூ. 5.85 கோடியில் தேரோடும் நான்கு வீதிகளையும் கான்கிரீட் சாலையாக மாற்றத் திட்டமிடப்பட்டு, இப் பணிகளை தமிழக பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன் கடந்த பிப்ரவரி  4-ம் தேதி தொடக்கிவைத்தார். 3 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டுமென ஒப்பந்ததாரர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் கடந்த மார்ச் 3-ம் தேதி நடைபெற்றது. இதையொட்டி, தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு செய்து, திருவீதியுலா நடத்த வேண்டியிருந்ததால், கான்கிரீட் சாலைப் பணி ஏறத்தாழ 15 தினங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டது. அது மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது வடக்கு வீதி, மேல வீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் முதல் கட்டமாக அரையடி உயரத்தில் 40 அடி அகலத்துக்கு கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இதன் மேல் மேலும் ஓரடி உயரத்துக்கு கான்கிரீட் தளம் போடப்படவுள்ளது.

போக்குவரத்துக்கு முக்கிய சாலையாக தற்போதுள்ள கீழ வீதியில் இப் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. இச் சாலையில்தான் அனைத்துத் தேர்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

இது ஒருபுறம் இருந்தாலும், கடந்த ஆண்டு தேரோட்டத்தின் போது தேரின் மேல் பகுதியில் இருந்த மரக்கட்டை ஒன்று பெயர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்  மீது விழுந்து, காயமடைந்தார். மேலும், தேரின் மேல் பகுதி உள்ளிட்ட பல இடங்களில் மரப்பலகைகள் பலவும் பழுதடைந்து விட்டதால், தேர் திருப்பணிக்கு ரூ. 1.40 கோடியை அறநிலையத் துறை ஒதுக்கீடு செய்யவுள்ளதாக அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் இந்த மாதம் தெரிவித்தார்.

மேலும், நிகழாண்டில் தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அமைச்சர், நிகழாண்டில் தேரோட்டத்துக்குப் பின்னர்தான் தேர் திருப்பணிகள்  தொடங்கப்படவுள்ளன என்றார்.

ஆழித்தேர் மட்டுமல்லாது, அருள்மிகு சுப்பிரமணியர், அருள்மிகு சண்டிகேஸ்வரர் தேர்களும் பழுதடைந்துள்ளதால், அவற்றையும் முழுமையாக சீர்படுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தேரோடும் வீதிகளில் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் பணி ஏறத்தாழ ஜூன் மாத இறுதியில்தான் முடிவடையும் என்கிறது நெடுஞ்சாலைத் துறை வட்டாரம். சாலை முழுத் தரத்துடன் அமைய வேண்டியது அவசியம். அதற்கு முறைப்படி காலம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, அவசரப்பட்டு, எதையும் செய்தால், அது சாலையின் தரத்துக்கே பாதகமாக அமைந்து விடும் என்கின்றனர் நெடுஞ்சாலைத் துறையினர்.

இதுகுறித்து திருக்கோயில் செயல் அலுவலர் கண்ணபிரான் கூறியது:

நிகழாண்டில் தேரோட்டத்தை நடத்தும் வகையில், ஆழித் தேர் மேல் தட்டில் பழுதடைந்த பலகைகளுக்கு பதிலாக புதிய  பலகைகள் பொருத்தும் பணி ஓரிரு நாளில் தொடங்கப்படும். இப் பணிகள் ஏறத்தாழ 15 நாள்களில் முடிக்கப்படும்.

மேலும் சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் தேர்களிலும் பழுதடைந்த பகுதிகள் புதுப்பிக்கப்படும். இதற்கென அறநிலையத் துறை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

சாலைப் பணிகள் முடிந்தவுடன், மாவட்ட நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை உயர் அலுவலர்களுடன் கலந்தாலோசனை செய்து, தேரோட்டத் தேதி அறிவிக்கப்படும் என்றார் அவர்.

சாலைப் பணிகள் முடிவடைந்து, தேரோட்டம் ஏறத்தாழ ஜூலை மாதத்தின் மத்தியில்தான் நடத்தப்பட சாத்தியக் கூறுகள் உள்ளன. ஆனால், இக் காலத்தில் திருக்கோயிலில் ஆடிப்பூர விழாவைத் தொடங்க வேண்டியிருப்பதால், அதற்குள் தேரோட்டம் நடத்தப்படுமா என்ற சந்தேகம் பக்தர்களிடையே மேலோங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.