

ராமநாதபுரம்: போதிய ஆசிரியர்கள் இல்லாமல் திருஉத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரம் கவலையளிக்கும் வகையில் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஆலங்குளம், நல்லிருக்கை, சுமைதாங்கி, வெள்ளாமரிச்சுக்கட்டி, பனையடியேந்தல், மல்லல் மற்றும் திருஉத்தரகோசமங்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படிக்கும் பள்ளியாக இது இருந்து வருகிறது.
திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்டது திருஉத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப் பள்ளி. இதே ஒன்றியத்திலிருந்த ரெகுநாதபுரம், திருப்புல்லாணி,
வண்ணான்குண்டு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த உயர்நிலைப் பள்ளிகள் அனைத்தும் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு விட்டன. ஆனால், அதே ஒன்றியத்தில் உள்ள திருஉத்தரகோசமங்கை அரசு உயர்நிலைப் பள்ளி மட்டும் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படவில்லை.
இப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றுவதற்குத் தேவையான கட்டட வசதி, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி மற்றும் கட்டடங்கள் கட்டத் தேவையான இடவசதி இத்தனையும் இருந்தும் இப்பள்ளி தரம் உயர்த்தப்படாமலேயே இருந்து வருகிறது. பொதுமக்கள் பங்களிப்பாக ரூ.2 லட்சம் செலுத்தினால்தான் மேல்நிலைப் பள்ளியாக மாற்ற முடியும் என அரசு தரப்பில் கூறப்படுகிறது. இப்பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலோர் ஏழைகளாக இருப்பதால், அத்தொகையைக் கட்ட முடியாத நிலை இருந்து வருகிறது.
பள்ளியின் தரம் உயர்த்தப்படவில்லை என்ற குறை ஒருபுறம் இருப்பினும், மற்றொரு புறம் பள்ளியில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் மாணவ, மாணவியரின் கல்வித்தரம் பாதித்துள்ளது.
கடந்த ஆண்டு இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 74 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் இந்த ஆண்டு 28 சதவிகிதம் பேர் மட்டுமே
தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவர்களின் கல்வித் தரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக உணர முடிகிறது.
இது குறித்து திருஉத்தரகோசமங்கை ஊராட்சி மன்றத் தலைவர் என்.எஸ்.உத்தண்டவேலு கூறியதாவது:
பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் பேசப்படும் முக்கிய செய்தியாகி விட்டது. வரலாறு, புவியியல் பாடங்களை உடற்கல்வி ஆசிரியர்தான் நடத்துகிறார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கவலைப்படக்
கூடிய அளவுக்கு மாறிப்போனதற்கு முக்கிய காரணம் ஆசிரியர்கள் பற்றாக்குறைதான் என்றும் சொல்லலாம்.
பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடை இருக்கிறது. பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளி வளாகத்திலேயே திறந்த வெளியில் உட்கார்ந்து மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு பாட்டில்களையும், பாலித்தீன் பொருள்களையும்
போட்டுவிட்டுப் போய் விடுகின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதும் அவசியம்.
ரூ.2 லட்சம் கட்டினால்தான் பள்ளியைத் தரம் உயர்த்துவோம் என கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் அதிகமாக வசிப்பதால் அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, பள்ளியை உடனடியாக தரம் உயர்த்த வேண்டும். வரக்கூடிய ஆண்டிலாவது போதுமான ஆசிரியர்களை நியமித்து கல்வியின் தரம் குறைந்து விடாமல் கிராமத்து மாணவ, மாணவியரின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற அரசு முன்வர வேண்டும் என்றார்.
10
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.