மன்னார்குடி: திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு இந்தப் பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் தொழில்சார்ந்த நிறுவனங்களோ, பெரிய அளவிலான கல்வி நிலையங்களோ சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இல்லாத நிலை இருந்தது. இதில் திருவாரூர் மாவட்டம் முழுமையாக விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மாவட்டமாகும். நாகை மாவட்டத்திலோ குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கடல் வளத்தைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் இருந்தாலும், இந்த மாவட்டமும் விவசாயத்தையே நம்பி உள்ள மாவட்டமாகவே உள்ளது.
இந்த இரு மாவட்டங்களும் பிரசித்தி பெற்ற சைவ, வைணவ இந்து கோயில்கள், வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா ஆலயம், நாகூர் தர்கா என மூன்று மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் அதிகளவில் அமைந்துள்ள மாவட்டங்களாக மட்டுமே இதுவரையில் இருந்து வந்தன.
இதில் தற்போது சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் மூலம் திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகமும், தமிழக அரசின் சார்பில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், திருவாரூர் உயர் கல்விக்கான மையமாக மாறி வருகிறது.
இந்நிலையில், மத்திய பல்கலைக்கழகத்திலும், அரசு மருத்துவக் கல்லூரியிலும் உயர் கல்வி படிக்க வெளி மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் வருவதற்கு உரிய ரயில் வசதிகள் உள்ளனவா என்றால் இல்லையென்றே பதில் கூறலாம். இதனால், வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்கள் பெரும்பாலும் சாலை மார்க்கமாகவே வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதிலும், பல்வேறு இடங்களில் இருந்தும் திருவாரூருக்கு நேரடிப் பேருந்துகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பல பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதேபோல, உரிய ரயில் வசதி இல்லாததால், நாகை மாவட்ட மத வழிபாட்டுத் தலங்களுக்கு வரும் பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
தற்போது, நாகை மாவட்டம், நாகூரிலிருந்து திருவாரூர் வழியாக இயக்கப்படும் எர்ணாகுளம் விரைவு ரயில் (தடம் எண்: 6865) தினமும் மாலை 4.30 மணிக்கு நாகூரில் புறப்பட்டு, மறுநாள் காலை 6.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது. மறுவழித் தடத்தில் (தடம் எண்: 6866) இரவு 10.05 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11.45 மணிக்கு நாகூர் வந்தடைகிறது.
இதேபோல, மயிலாடுதுறையில் நாள்தோறும் மாலை 5.45 மணிக்கு புறப்படும் மைசூர் விரைவு ரயில் (தடம் எண்-6231) மறுநாள் காலை 9.20 மணிக்கு மைசூர் சென்றடைகிறது. மறுவழித் தடத்தில் (தடம் எண்-6232) மைசூரிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.00 மணிக்கு மயிலாடுதுறையை வந்தடைகிறது. இந்த மூன்று ரயில்களுமே நள்ளிரவில்தான் கொங்கு மாவட்டங்களைக் கடக்கின்றன. இதனால், இந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாகூரிலிருந்து மதுரை, விருதுநகர், செங்கோட்டை வழியாக கொல்லம் (கேரளம்) வரை சென்றுகொண்டிருந்த விரைவு ரயில், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அகல ரயில் பாதை அமைக்கும் பணியின் காரணமாக நிறுத்தப்பட்டது.
தற்போது, திருவாரூரிலிருந்து தென் மாவட்டங்களுக்கு உரிய ரயில் வசதி இல்லை. ரயில் மூலமாகச் செல்ல வேண்டும் என்றால், சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சியிலிருந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உயர் கல்வி நிறுவனம், அரசு மருத்துவக் கல்லூரி என அமைத்து நடைமுறைப்படுத்தி வருகிறார் தமிழக முதல்வர். அதன் பயன் முழு அளவில் வெற்றி பெற வேண்டும் எனில், அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் தொலைவிட ரயில்கள் தென்மாவட்டங்கள், கொங்கு மாவட்டங்கள் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த அனைவருக்கும் பயன்படும் வகையில், கால நேரத்தைக் கணக்கில் கொண்டும், திருவாரூருக்கு புதிய ரயில்கள் இயக்கவும், திருவாரூரில் ரயில் பெட்டி பராமரிப்புப் பணிமனையை அமைத்திடவும் மத்திய ரயில்வே துறை நிதிக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் மத்திய அரசிடம் முதல்வர் வலியுறுத்தி, ஒப்புதல் பெற வேண்டும் என்பதே திருவாரூர், நாகை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லஷ்கர் மூத்த தலைவர் அமீர் ஹம்சா மீது துப்பாக்கிச் சூடு! ஓராண்டுக்குள் மற்றொரு கொலை முயற்சி!
திமுகவினர் ரூ. 8,000 கூப்பன் வழங்குவதாக தவெக மனு: நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

சபரீசன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் டி.கே. சிவக்குமார் பங்கேற்பு!

கருப்பு பக்கா கமர்சியல் திரைப்படம்: ஆர். ஜே. பாலாஜி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


