

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் தொல்லியல் தளம் ஒன்று அழிக்கப்பட்டு வருவது பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களை கவலைகொள்ளச் செய்துள்ளது.
திருநெல்வேலி - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் நான்குனேரி அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சுமார் 2,520 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகமும், ஏஎம்ஆர்எல்
இண்டர்நேஷனல் டெக் சிட்டி லிமிடெட் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில், முதல் கட்டமாக சுமார் 30 ஏக்கர் நிலத்தில் தொழில் தொடங்குவதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தெற்கு ஓரத்தில் அமைந்துள்ள பெரும்படையார் சாஸ்தா கோயிலை ஒட்டி ஆமைப் பொத்தை (ஆமை வடிவிலான சிறிய மலைக் குன்று) உள்ளது. தற்போது இந்த பொத்தையின் ஒரு பகுதியையும் சீரமைத்து வருகின்றனர். இங்கு துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மண்தோண்டும் பெரிய இயந்திரங்களைக் கொண்டு பொத்தையை தோண்டி சமப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு மண்ணை தோண்டும்போது உள்ளே இருந்த பல அரிய புதைபொருள்கள் வெளிப்பட்டன. அவற்றில் சில சேதமுற்றன. பண்டைகால முதுமக்கள் தாழி, கறுப்பு-சிவப்பு பானை ஓடுகள், மண்பாத்திரங்கள், மண்ணில் செய்யப்பட்ட பிரிமணை, குடுவைகள், பானை மூடிகள், குமிழ் வடிவ கைப்பிடியுடன் கூடிய மூடிகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
இதன் தொன்மை தெரியாதவர்கள் அதைப் பற்றி பொருள்படுத்தாமல் தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், அந்த அரிய புதைபொருள்கள் மட்டுமன்றி அந்த தளமும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகிறது.
அவ்வழியாக தற்செயல் பயணம் மேற்கொண்ட தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினரும், பண்பாட்டு ஆய்வாளருமான தொ. பரமசிவன், ஓய்வுபெற்ற மாவட்ட தொல்லியல் அதிகாரி செ.மா. கணபதி ஆகியோர் பெரும்படையார் சாஸ்தா கோயிலில் பழங்கால கல்வெட்டுகள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறியும் ஆவலில் அங்கு சென்றனர். அப்போது அருகில் உள்ள பொத்தையில் இந்த அரிய புதைபொருள்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பூமிக்கு மேலேயும் சில இடங்களில் முதுமக்கள் தாழிகள் தென்பட்டன. அங்கு அவர்கள் தொடர்ந்து தேடுதல் பணியை மேற்கொண்டபோது, கையில் கிடைத்த தொன்மையான பொருள்களைச் சேகரித்து கொண்டு வந்து ஆய்வு செய்தனர்.
""தாமிரபரணி ஆற்றங்கரை கிராமமான ஆதிச்சநல்லூரில் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த தொன்மையான பொருள்களைக் கொண்டு அந்த நாகரிகம் கி.பி. 2-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தெரிய வந்துள்ளது. அதிலும் அங்கு கிடைத்த பொருள்களை "கார்பன்-14' (தொல் பொருள்களின் தொன்மையைக் கண்டறியும் சோதனை) சோதனை மூலம் அந்த நாகரிகம் கி.மு. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆமைப் பொத்தையில் கிடைத்துள்ள புதைபொருள்களை மேலோட்டமாக ஆய்வு செய்யும்போது இது ஆதிச்சநல்லூரின் தொடர்ச்சியாகவே இருக்க வேண்டும்'' என்கிறார் பரமசிவன்.
ஆமைப் பொத்தை அமைந்துள்ள ராஜாக்கள்மங்கலம் கிராமத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியில் சுமார் 45 அடி நீளமுள்ள கோயிலின் அடித்தளம் கண்டறியப்பபட்டுள்ளது. மேலும் அங்கு கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த, முழுமை பெறாத 28 கற்சிலைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் அந்த இடத்திலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில்தான் இந்த ஆமைப் பொத்தையும் அமைந்துள்ளது. அதுமட்டுமன்றி, சுமார் 200 மீட்டர் தொலைவில்தான் நம்பியாறும் உள்ளது.
பண்டைய மனித நாகரிகம் எல்லாம் ஆற்றங்கரையிலேயே அமைந்துள்ளது. அந்த வகையில் தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகமான ஆதிச்சநல்லூரைப் போல இந்த ராஜாக்கள்மங்கலம் ஆமைப் பொத்தையும் நம்பியாற்று நாகரிகமாக இருக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் இம் மாதம் 28, 29ஆம் தேதிகளில் தமிழ்நாடு தொல்லியல் ஆய்வுக் கழகம் சார்பில் 22-வது மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்த ஆமைப் பொத்தை தொல்லியல் தளம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
எனவே, சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக இந்த அரிய பண்பாட்டுச் சின்னமான ஆமைப் பொத்தை தொல்லியல் தளத்தை அழிப்பதை உடனடியாகக் கைவிட்டு அதைப் பாதுகாக்க வேண்டும்.
அங்குள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பையும் உடனடியாக தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி செய்து தொன்மையான பொருள்களைக் கண்டெடுத்து பண்டைய தமிழர்களின் நாகரிக வாழ்க்கையை உலகம் அறியச் செய்யும் வகையில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அருகிலேயே ஓர் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என்பது பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களின் வேண்டுகோள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.