கரூர் - மதுரை நேரடிப் பேருந்து வேண்டும்
கரூர் : கரூர் - மதுரை இடையே நேரடிப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கரூர் மாவட்டப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வளர்ந்து வரும் தொழில் நகரான கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்ற


கரூர் : கரூர் - மதுரை இடையே நேரடிப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என கரூர் மாவட்டப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வளர்ந்து வரும் தொழில் நகரான கரூரில் வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, கொசுவலை உற்பத்தி, பேருந்து கூடு கட்டுதல் உள்ளிட்ட பல தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இவற்றில், ஜவுளி உற்பத்தி கரூரின் முக்கியத் தொழிலாக, அன்னியச் செலாவணியை ஈட்டித் தருவதாக உள்ளது.
இந்தத் தொழில் மூலம் கரூர் மாவட்டம் மட்டுமன்றி திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களும் வேலைவாய்ப்பைப் பெற்று வருகிறார்கள். இந்த வேலைவாய்ப்பில் சாதாரணக் கூலித் தொழிலாளர்கள் முதல், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஜவுளி வடிவமைப்பாளர்கள், மேலாளர்கள் வரை பல்வேறு பணிகளிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கரூரில் பணியாற்றி வருகிறார்கள்.
மேலும், அரசு, தனியார் நிறுவனங்களிலும் தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் கணிசமாகப் பணியாற்றுகின்றனர். இவர்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வது என்பது சாதாரண விஷயமல்ல.
விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கேரள மாநிலத்திற்குச் செல்ல வேண்டிய பயணிகள் கரூரிலிருந்து மதுரைக்குத்தான் செல்ல வேண்டியிருக்கும். தூங்கா நகரம் என்றழைக்கப்படும் மதுரைக்குச் சென்றால் அனைத்து ஊர்களுக்கும் பேருந்துகள் எளிதில் கிடைக்கும்.
மேலும், தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய அனைத்துப் பேருந்துகளும் மதுரை வழியாகத்தான் செல்ல வேண்டும். எனவே, தென் மாவட்டங்கள், கேரள மாநிலப் பயணிகளின் நுழைவுவாயில் என்று மதுரையை அழைக்கலாம்.
ஆனால், அவ்வாறான மதுரைக்கு கரூரிலிருந்து எளிதில் சென்றுவிட முடியாது. கரூர் பயணிகள் சேலம், ஈரோட்டிலிருந்து வரும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இந்தப் பேருந்துகள், புறப்படும் இடத்திலேயே அதிகமான பயணிகளை ஏற்றிவிட்டால், கரூர் பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே அவை வருவதில்லை.
கரூர் பயணிகளையும் புறவழிச் சாலையில் இறக்கிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால், கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதையும் கடந்து, கரூருக்குள் வரும் பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறும் பயணிகள், சுமார் 135 கி.மீ. தொலைவை நின்ற நிலையிலேயே மூன்றரை மணி நேரம் பயணிக்க வேண்டும்.
அதேநேரத்தில், கரூரிலிருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 256 முறையும், தனியார் பேருந்துகள் 67 முறையும் சென்று வருகின்றன. சென்னைக்கு கரூரிலிருந்து 3 பேருந்துகளும், பள்ளப்பட்டி, தாராபுரத்திலிருந்து தலா ஒரு பேருந்தும் புறப்படுகின்றன. மேலும், உதகை, கம்பம், வேளாங்கண்ணி, எர்ணாகுளம், கோபி, திருச்செந்தூர், விருதுநகர், அறந்தாங்கி, காரைக்கால், கும்பகோணம், ஏற்காடு, ராமேசுவரம், மங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் பேருந்துகள் புறப்பட்டுச் செல்கின்றன.
ஈரோடு, கோவை பகுதிகளுக்கு சுமார் 15-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சிக்கு 5 நிமிஷத்திற்கு ஒரு பேருந்து என்ற வகையில் இயக்கப்படுகிறது. கும்பகோணம், மதுரை, சேலம், கோவை கோட்டங்களும், அரசு விரைவுப் பேருந்திற்கென தனி அலுவலகமும் கரூரில் செயல்பட்டு வருகிறது.
ஆனாலும், முக்கிய நகரமான மதுரைக்கு கரூரிலிருந்து நேரடிப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வேறு ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால், விடுமுறை தினங்கள், பண்டிகை நாள்களில் கரூர் பயணிகள் தென் மாவட்டங்களுக்குச் செல்ல நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இத்தகைய நாள்களில் அனைத்து வழித்தடப் பேருந்துகளிலும் கூட்டம் அதிகமிருப்பது வழக்கம். இதனால், மக்கள் நின்றவாறே பயணம் மேற்கொள்வர்.
கரூரைப் பொருத்தவரை தென் மாவட்டங்களுக்குச் செல்ல வேண்டிய பயணிகள் பண்டிகை, விடுமுறை நாள்களில் பெரும்பகுதி நேரத்தை பேருந்து நிலையத்தில்தான் கழிக்க வேண்டியுள்ளது. எனவே, கரூரிலிருந்து மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பயணிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறையும் இதுவிஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...