மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பராமரிப்பின்றி பாழாகின்றன பள்ளிக் கணினிகள்!

வேலூர் : தமிழக அளவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினிகளைப் பராமரிக்க அரசு போதிய ஏற்பாட்டைச் செய்யவில்லை. இதனால், கணினி மென்பொருள், உதிரி பாகங்களைப் பழுதுபார்க்க முடியாம

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:48 am

வேலூர் : தமிழக அளவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினிகளைப் பராமரிக்க அரசு போதிய ஏற்பாட்டைச் செய்யவில்லை. இதனால், கணினி மென்பொருள், உதிரி பாகங்களைப் பழுதுபார்க்க முடியாமல் பயனற்றுக் கிடக்கின்றன.

தமிழக அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு கணினி அறிவியல் பாடத் திட்டம் புதிதாகத் தொடங்கப்பட்டபோது, தொண்டு நிறுவனங்களின் உதவியோடு ஒரு சில பள்ளிகள் மட்டும் கணினிகளைப் பெற்று, மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வந்தன.

இத்திட்டத்தைப் பார்வையிட்ட தமிழக அரசு, 2000-ம் ஆண்டில் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் கணினி வழங்க நடவடிக்கை எடுத்தது. இதையொட்டி, அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ்-1, பிளஸ்-2 பாடத் திட்டத்தில் கணினி அறிவியல் எனும் தனிப் பிரிவு தொடங்கப்பட்டு, தலா 10 கணினிகள் வழங்கப்பட்டன.

இதை எல்காட் மூலம் அரசு பராமரித்தது. எல்காட் நிறுவனம் தனது ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தியிருந்தது. அப்போது கணினிகள் பழுதாகும்போது, அதற்கான உதிரி பாகங்கள், மென்பொருள் வசதிகளை எல்காட் அளித்து வந்தது. இதனால்,  அவ்வப்போது பழுதாகும் கணினிகள் கூடிய விரைவில் சரி செய்யப்பட்டு, மாணவர்களின் பயன்பாட்டில் இருந்தன. ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து, பள்ளிகளின் கணினிகளைப் பராமரிக்கும் பொறுப்பிலிருந்து எல்காட் 2005-ம் ஆண்டோடு விலகிக் கொண்டது.

இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களின் பாடத் திட்டத்தில் கணினி தொடர்பான பாடங்கள் சேர்க்கப்பட்டதும், அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் தலா 10 கணினிகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. இம்முறை எல்காட் பணியாளர்களை அங்கு நியமிக்கவில்லை. பதிலாக, நிறுவப்படும் புதிய கணினிகள் இயங்குகின்றனவா? என்பதைப் பரிசோதித்துப் பார்த்து, சான்று அளிக்கும் பணியோடு நிறுத்திக்கொண்டன.

கணினி நிறுவப்படும்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், கணினிகளை விநியோகித்த நிறுவனங்கள் அதை உடனடியாகச் சரி செய்து தரவேண்டுமென்ற விதி இருந்தது. இதுவும் 5 ஆண்டு ஒப்பந்தம் முடிந்ததையொட்டி, கணினி விநியோகித்த நிறுவனங்கள் தங்களுக்கான நிதியை பெற்றுக்கொண்டு விலகிவிட்டன.

இதனால், தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்ட தலா 10 கணினிகள், 5 வாட் யுபிஎஸ் பேட்டரி, பிரிண்டர், 2 குளிர்சாதனப் பெட்டிகள் ஆகியவற்றைப் பராமரிக்க வழியில்லாமல் போனது. இவற்றில், கணினி மென்பொருள் அடிக்கடி பழுதாகும்போது, அதை ஆசிரியரே மாற்றக்கூடிய நிலை இருந்தாலும், உதிரிபாகங்கள், பிரிண்டர், யுபிஎஸ் பேட்டரி ஆகியவற்றில் பழுது ஏற்படும்போது, அதை சரி செய்ய வழியில்லை.

சில பள்ளிகளில் மட்டுமே, பெற்றோர்-ஆசிரியர் கழகங்கள் பெறும் நன்கொடையிலிருந்து இரு கணினிகள் வரை சரி செய்யப்படுகின்றன. மற்ற 8 கணினிகள் எவ்விதப் பயன்பாடுமின்றி முடங்கிக் கிடக்கின்றன.

ஒரு பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவர்களில், கணினி பயன்படுத்த வேண்டிய சுமார் 200-க்கும் அதிகமானோர், இருக்கும் 2 கணினிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டியிருப்பதால், அவர்களுக்கு கணினி பற்றிய அடிப்படை அறிவை பள்ளிகளில் இருந்து பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், கணினி இருந்தும் கற்றலுக்கு அவை பயன்படவில்லை.

கணினி பயிலும் மாணவர்களிடம் இருந்து ஆண்டுக்கு தலா  200 வசூலித்து, அரசுக்கு செலுத்துகின்றனர் பள்ளித் தலைமையாசிரியர்கள். அந்த நிதியை மீண்டும் அப்பள்ளிக்கே அளித்து, கணினிகளைப் பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

அல்லது, எல்காட் நிறுவனத்திடமே மீண்டும் அளிக்கலாம். இதைச் செய்யாவிட்டால் கணினிகள் வீணாகிப் போகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.