சென்னை : பல்கலைக்கழக ரேங்க் வாங்கிய மாணவிக்கு இதுவரை எந்தவித தகவலோ அல்லது சான்றிதழையோ சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கவில்லை.
÷இதனால், தனக்கு பிடித்த கல்லூரியில் பட்ட மேற்படிப்பை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என அந்த மாணவி கவலை தெரிவித்துள்ளார்.
÷இது குறித்த விவரம்: சென்னை கொருக்குப்பேட்டை எழில் நகரைச் சேர்ந்தவர் ஜெபா கபல். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் பட்டப் படிப்பை 2006-09-ம் ஆண்டில் படித்தார்.
உரிய காலத்தில் படிப்பை முடித்த ஜெபா கபல் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார்.
இதை அறிந்த கல்லூரி ஆங்கிலத் துறைத் தலைவர் எம். ரவிச்சந்திரன், 60 சதவீத மதிப்பெண்ணுக்கு பல்கலைக்கழக ரேங்க் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே பல்கலைக்கழகம் சென்று விசாரிக்குமாறு மாணவியை அறிவுறுத்தியுள்ளார்.
உடனடியாக பல்கலைக்கழகம் சென்று, தனக்கு ரேங்க் கிடைத்துள்ளதா என மாணவி விசாரித்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் விண்ணப்பத்தையே பெற்றுக்கொள்ளாமல், ரேங்க் இல்லை என பதிலளித்துள்ளனர்.
இந்தநிலையில் ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட பல்கலைக்கழக ஆண்டறிக்கையின் 93-வது பக்கத்தில் அம்பேத்கர் கலைக் கல்லூரி மாணவி ஜெபா கபல் 3-வது ரேங்க் பெற்றிருப்பது தெளிவாக அச்சிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக ஊழியர்களின் கவனக் குறைவால் நல்ல வாய்ப்புகள் பலவற்றை இழந்துவிட்டேன் என மாணவி புகார் கூறுகின்றார்.
இதுகுறித்து மாணவி கூறியது:
கல்லூரி துறைத் தலைவர் கூறியதும், பல்கலைக்கழகம் சென்று விசாரித்தபோது, டாக்டர் அம்பேத்கர் கல்லூரிக்கெல்லாம் பல்கலைக்கழக ரேங்க் கிடைக்க வாய்ப்பே இல்லை என இழிவாக பேசி எனது விண்ணப்பத்தையும் சம்பந்தப்பட்ட நபர் நிராகரித்துவிட்டார். இந்த பதில் என்னை மிகவும் பாதித்தது.
பல்கலைக்கழக ரேங்க் பெற்றிருப்பது முன்னரே தெரிந்திருந்தால், சென்னை பல்கலைக்கழகத்திலேயே பட்ட மேற்படிப்பை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கும்.
இரண்டுக்கும் மேற்பட்ட சிறந்த கல்லூரிகளில் பட்ட மேற்படிப்பு விண்ணப்பித்தேன். ஆனால் 60 சதவீத மதிப்பெண் என்பதால் அந்தக் கல்லூரிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேநேரம் பல்கலைக்கழக ரேங்க் பெற்றிருப்பது தெரிந்திருந்தால், விரும்பிய கல்லூரிகளில் வாய்ப்பு கிடைத்திருக்கும். ஏனெனில், பல்கலைக்கழக தேர்வும், அதில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதும் மிகவும் கடினம்.
இப்போது பிராட்வே-யில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் எம்.ஏ. ஆங்கிலம் படித்து வருகிறேன்.
பல்கலைக்கழக ஆண்டறிக்கையில் ரேங்க் பெற்றிருப்பதை அறிந்து விசாரித்தபோதும், பல்கலைக்கழக ஊழியர்கள் என்னை அலைக்கழிக்கின்றனர் என்றார்.
இதுகுறித்து மாணவியின் தந்தை பொன்னுசாமி மற்றும் தாய் மல்லிகா ஆகியோர் கூறியது:
கடந்த மே மாதம் எங்களுடைய பெண்ணுக்கு பட்டம் வழங்கப்பட்டது. அப்போதே பல்கலைக்கழக ரேங்க் பெற்றிருப்பது தெரிந்திருந்தால் ஆளுநரின் கையில் ரேங்க் சான்றிதழை பெற்றிருப்பார்.
பல்கலைக்கழக ஊழியர்களின் கவனக்குறைவால், கடினமாக படித்து தேர்ச்சி பெற்றுள்ள எங்களுடைய பெண்ணுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றனர். இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கல்லூரி பேராசிரியர் கூறியது:
மாணவி ஒருவர் ரேங்க் பெற்றிருந்தால் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் கல்லூரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இதுவரை பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவித தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. பல்கலைக்கழகத்தின் மெத்தனப்போக்கால் மாணவியின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
வரும் காலத்திலாவது, இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்கள் மீது பல்கலைக்கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொடைக்கானலில் முதல்வர் நடைப்பயிற்சி: ஆர்வத்துடன் மக்கள் செல்ஃபி

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

விஜய் அரசியல்... அதிரடியாக பதிலளித்த மம்மூட்டி!

மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


