டெல்டா-கடலோர மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு ரூ.1,500 கோடி

சென்னை, டிச.15: தமிழகத்தில் கன மழையால் பாதிப்புக்குள்ளான கடலோர மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள பொதுப் பணித்துறை விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. இதற்கான ஆய்வுப் பணிகள் ம
Updated on
2 min read

சென்னை, டிச.15: தமிழகத்தில் கன மழையால் பாதிப்புக்குள்ளான கடலோர மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள பொதுப் பணித்துறை விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது.

இதற்கான ஆய்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள உத்தேச நிதியாக ரூ.1,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  இந்த நிதியை மத்திய அரசின் வெள்ளத் தடுப்பு பணிகள் நிதியில் இருந்து பெற முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் பெய்த கன மழையால் சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி, தஞ்சாவூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

சுமார் 15 லட்ச ஏக்கர் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தன. மேலும் 203 பேர் இறந்தனர். இதுதவிர வீடுகள், குடிசைகள், சாலைகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்டவையும் கடுமையாகச் சேதமடைந்தன.

இதைத்தொடர்ந்து மழை பாதித்த கடலோர மாவட்டங்களில் தனி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து மழை வெள்ளச் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உடனடி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ.100 கோடியும், இதுதவிர வெள்ளச் சேத பணிகளுக்கு ரூ.500 கோடி உத்தேச நிதி ஒதுக்கியும் முதல்வர் கருணாநிதி அறிவிப்பை வெளியிட்டார்.

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள்:

இந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் வெள்ளச் சேதங்களை நிரந்தரமாகத் தடுக்கவும், பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான ஏரிகள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகளை நிரந்தரமாகச் சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஏரிகள், அணைகள், நீர் நிலைகளில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் குமரேசன் மற்றும் திட்ட உருவாக்கத்தின் தலைமைப் பொறியாளர் விசுவாச செல்வக்குமார் ஆகியோர் அடங்கிய பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

வெள்ளச் சேத பாதிப்புளை உடனே சரிசெய்ய தாற்காலிக பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.  இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள ஏரிகள், அணைகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்யப்பட உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பொதுப்பணித்துறையின் கீழ் சுமார் 85  அணைகளும், தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத்தின் கீழ் 38 அணைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் மொத்தம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன.

இதில் 13,702-க்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப் பணித்துறையின் கட்டுப்பாட்டில் வருகின்றன.  2005-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போது 9,661 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நிரந்தர வெள்ளத் தடுப்பு பணிகள் குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறியது:

கன மழை காரணமாக, கடலோர மாவட்டங்களில் போதிய வடிகால் இல்லாததால் கடும் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான கடலோர மாவட்டங்கள் சமதளமாகவும், தாழ்வாகவும் உள்ளதால் மழை நீர் ஆற்றின் வழியாகக் கடலில் கலப்பதில்லை. இதனால் போதிய வடிகால் இல்லாத நிலையில் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.

 வெள்ளச் சேதம் தொடர்பான பணிகள் பெரும் செலவினம் என்பதால்,  மத்திய அரசிடம் இருந்து நிதி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு ரூ.25,000 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டில் மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசு |650 கோடி நிதி பெற்று பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கடலோர மாவட்டங்களில் ஆற்று நீர் போக்கை சரி செய்யவும், மழை அளவு, மழையால் ஏற்பட்ட பாதிப்பு, ஆற்று நீரை கடலில் கலக்கச் செய்வது போன்ற வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

டெல்டா -கடலோர மாவட்டங்கள்:

குறிப்பாக டெல்டா பகுதிகள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும்  கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் விடுபட்டு போன பகுதிகளில் இந்த வெள்ளத் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆய்வு 6 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, மத்திய நீர் வள ஆணையத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். இப்போதைக்கு உத்தேச நிதியாக  |1,500 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com