
பவானி, ஜன. 21: விசைத்தறியில் கைத்தறி ரகத்தின் உற்பத்தி அதிகரிப்பு, நிலையில்லாத நூல் விலை, சாயப்பட்டறைப் பிரச்னை, கூட்டுறவுச் சங்கங்களுக்கு ரூ.100 கோடி வரையிலான மானிய நிலுவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கைத்தறித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள நெசவாளர்களின் வாழ்க்கை கஞ்சித் தொட்டி திறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, கவுந்தப்பாடி, சென்னிமலை, அந்தியூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைத்தறி நெசவுத் தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். கைத்தறித் துணிநூல் துறையின் கீழ் 200க்கும் மேற்பட்ட கூட்டுறவு நெசவாளர்கள் சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பல்வேறு பிரச்னைகளால் நெசவுத் தொழிலும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரமும் கேள்விக் குறியாக உள்ளது.
ஜமக்காள உற்பத்தி மற்றும் விற்பனை பெருமளவு குறையும் நிலை ஏற்பட்டதால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஏற்றுமதிக்கான கால்மிதியடி ரகம் (மேட்) தனியாரிடம் உற்பத்தி செய்ய ஆர்டர்கள் பெறப்பட்டு, நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்கப்பட்டு வந்தது. இதனால், கூட்டுறவு சங்கங்களை நம்பியுள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு வருவாய் நிலையாகக் கிடைந்து வந்தது.
ஆனால், தற்போது கூட்டுறவு சங்கங்கள் மூலம் மேட் உற்பத்தி செய்வது முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நெசவாளர்களுக்கு பெருமளவு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர். கவுந்தப்பாடி, சலங்கபாளையம், சென்னிமலை பகுதியில் இப்பிரச்னையால் கைத்தறித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கைத்தறியில் நெசவாகும் பாரம்பரியம் மிக்க பவானி ஜமக்காளம் தற்போது சுரண்டல்காரர்களின் கைகளில் சிக்கி புகழை இழந்து வருகிறது. கைத்தறி ரகத்துக்கு ஒதுக்கப்பட்ட இந்த ரகத்தை விசைத்தறியில் உற்பத்தி செய்து, கைத்தறி ஜமக்காளம் என விலையைக் குறைத்தும் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களும் தற்போது பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி கடன் வாங்கி நடத்தும் நிலையில் உள்ளன. ஆண்டுக்கு 135 நாள்கள் அறிவிக்கப்படும் 30 சத தள்ளுபடி விற்பனையில் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டிய மானியத் தொகை 2008-ம் ஆண்டு முதல் வழங்கப்படவில்லை. ரூ.70 லட்சம் வரை ஒவ்வொரு கூட்டுறவுச் சங்கத்துக்கும் மானிய நிலுவை உள்ளது. இவ்வாறு ஈரோடு மாவட்டம் முழுவதும் சுமார் ரூ.100 கோடி வரையிலான மானிய நிலுவை உள்ளது.
இதனால், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளை ஈடாக வைத்து கூட்டுறவுச் சங்கங்கள் 10 சத வட்டியில் வங்கிகளில் கடன் பெற்று வருகின்றன. கூட்டுறவுச் சங்கங்களைக் காக்க உடனே மானியத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விசைத்தறி ஜமக்காள உற்பத்தி உள்பட பல்வேறு பிரச்னைகளால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாவதோடு கஞ்சித் தொட்டி திறக்கும் நிலை உருவாகும் என்கிறார் பவானி எம்எல்ஏ கே.வீ.ராமநாதன்.
வாழ்ந்தாலும் 10 ஆண்டு வீழ்ந்தாலும் 10 ஆண்டு
குழித்தறியில் இறங்கி கடுமையாக வேலை செய்ய வேண்டும் என்பதால் இளைய தலைமுறையினர் கைத்தறி ஜமக்காள நெசவுத் தொழிலில் ஈடுபட ஆர்வம் காட்டுவதில்லை. 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே தற்போது கைத்தறி நெசவுத் தொழிலில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நெசவாளர்கள் வேறு தொழில்களுக்கு மாறியுள்ளனர்.
கைத்தறி ஜமக்காளம் கனம் அதிகம், துவைப்பதில் சிரமம் என்பதால் வீடுகளுக்கு வாங்குவதும் தற்போது குறைந்து வருகிறது.
கைத்தறியில் நாளொன்றுக்கு ஒரு ஜமக்காளம் உற்பத்தி செய்ய முடியுமென்றால், விசைத்தறியில் 10 ஜமக்காளங்கள் நெசவாகும். மக்களின் வாழ்க்கை முறை மாற்றம், விசைத்தறி உற்பத்தி, நிலையற்ற நூல் விலை, அரசின் பாராமுகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அடுத்த பத்து ஆண்டுகளில் இத்தொழில் முற்றிலும் நசிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் மேலும் 10 ஆண்டுகளுக்கு இத்தொழில் தாக்குபிடிக்கும், இல்லையெனில் 10 ஆண்டு காலத்தில் முற்றிலும் வீழ்ச்சியடையும் நிலை ஏற்படும் என்கிறார்கள் கூட்டுறவுச் சங்க அலுவலர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.