நலமின்றி தவிக்கும் நலத்துறை பள்ளிகள்

ஈரோடு: கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, நிர்வாகச் சீர்கேடு காரணமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை பள்ளிகள் கல்வித்தரத்தில் முன்னேற்றமடைய முடியாத நிலையில் உள்ளன.   தமிழகத்தில் ஆதிதிராவிட மற்றும் ப
நலமின்றி தவிக்கும் நலத்துறை பள்ளிகள்
Updated on
2 min read

ஈரோடு: கட்டமைப்பு வசதிகள் குறைபாடு, நிர்வாகச் சீர்கேடு காரணமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை பள்ளிகள் கல்வித்தரத்தில் முன்னேற்றமடைய முடியாத நிலையில் உள்ளன.

  தமிழகத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 1396  பள்ளிகள் செயல்படுகின்றன.  இப் பள்ளிகளில் சுமார் 2.51 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப் பள்ளிகளுக்கான ஆசிரியர் நியமனம், இடமாறுதல், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட  பள்ளி வளர்ச்சிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையே மேற்கொள்கிறது.  

  பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுப் பள்ளிகளை ஒப்பிடும்போது, நலத்துறை பள்ளிகள் அடிப்படை வசதிகளிலும் கல்வித்தரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளை கண்காணிக்க உதவி தொடக்க கல்வி அலுவலர் முதல் இயக்குநர் வரை பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள் உள்ளனர். இதனால் இப் பள்ளிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது.  இதனால் இப்பள்ளிகளில் கல்வியின் தரமும் மேம்படுகிறது.

  மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நல அலுவலரின் கட்டுப்பாட்டிலேயே நலத்துறை பள்ளிகள் செயல்படுகின்றன. இத்துறைக்கு ஒட்டுமொத்தமாக ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பகுதியே இப்பள்ளிகளின் வளர்ச்சிக்குச் செலவிடப்படுகிறது. மேலும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் பணியாற்றும் ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் கல்வித்துறையில் அதிகாரிகளாகவும் வாய்ப்புள்ளது. ஆனால், நலத்துறை பள்ளிகளின் ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் என்ற நிலையிலிருந்து வேறு உயர்ந்த பதவிக்குச்  செல்வதற்கு வாய்ப்பில்லை.   ஆசிரியர்களுக்கு உரிய அளவில் ஊக்கம் அளிக்கப்படாததால், பல இடங்களில் இப் பள்ளிகளின் செயல்பாடு பெயரளவில் மட்டுமே உள்ளது.  

   நடப்பு நிதியாண்டில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறைக்கு ரூ.889.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளாதகவும், இதில் ரூ.720.79 கோடி கல்வி வளர்ச்சிக்கென செலவிடப்படவுள்ளாதவும், துறைக்கான மொத்த ஒதுக்கீட்டில்  இத்தொகை  81 சதம் என்றும் நிதிநிலை அறிக்கையில் அரசு தெரிவித்துள்ளது.  இந்த நிதி உரிய வழியில் செலவு செய்யப்பட்டால் இப்பள்ளிகள் அனைத்தும் சில ஆண்டுகளிலேயே தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை பெற்றுவிடும்.    நலத்துறை பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகச் செலவு செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய மண்டல அளவில் சிறப்புக் குழுக்களை அமைக்க வேண்டும்.

இப் பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துதற்கு மாவட்டந்தோறும் மாவட்டக் கல்வி அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையான பதவி உயர்வுகள் உறுதி செய்யப்பட வேண்டும்.

  10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை எதிர்பார்க்கும் அதே வேளையில், நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் ஆசிரியர்களை நியமனம் செய்யவும், போதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக் கொடுக்கவும் அரசு முன்வர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com